மீண்டும் எம்.பி வாய்ப்பு தராதது வருத்தம் அதிமுகவில் கலகக் குரல் எழுப்புகிறாரா மைத்ரேயன்..? ஜெ.சமாதி முன் குமுறல்

Admk ex Rajya sabha mp mythreyan worries over party leaders not giving chance again

by Nagaraj, Jul 25, 2019, 13:51 PM IST

ஜெயலலிதா தமக்கு 3 முறை ராஜ்யசபா எம்.பி.யாகும் வாய்ப்பு வழங்கி அழகு பார்த்தார். இப்போதும் அவர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தற்போது தமக்கு மீண்டும் ராஜ்யசபா வாய்ப்பு வழங்காதது வருத்தமளிக்கிறது என ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் மைத்ரேயன் தமது குமுறலை வெளிப்படுத்தி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் தமிழக பாஜகவில் முக்கியப் புள்ளியாக திகழ்ந்தவர் மைத்ரேயன். இவருக்கு டெல்லியில் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பிரதமர் மோடி என பாஜக மேலிடத் தலைவர்களுடன் நல்ல தொடர்பும் இருந்தது. 2001-ல் திடீரென இவரை அதிமுகவில் சேர்த்துக் கொண்ட ஜெயலலிதா, ராஜ்யசபா எம்.பி.பதவியும் வழங்கி கவுரவித்தார்.

இதனால் டெல்லியில் தலைவர்களிடையே உள்ள தமது செல்வாக்கால், அதிமுகவின் டெல்லி விவகாரங்களை திறம்பட கையாண்டு, ஜெயலலிதாவிடம் சபாஷ் பெற்றார். இதனால் போயஸ் கார்டனில் சர்வ சுதந்திரமாக ஜெயலலிதாவை சந்திக்கும் அளவுக்கு செல்வாக்குப் பெற்றார். இதனால் மைத்ரேயனை, மீண்டும் 2 முறை ராஜ்யசபா எம்.பி.யாக்கினார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ். பக்கம் அணிவகுத்த மைத்ரேயன் அவருக்கு சூத்ரதாரியாகவே விளங்கினார். டெல்லியில் பிரதமர் மோடியிடம் இருந்த செல்வாக்கை வைத்தே, பாஜக மேலிடத் தலைவர்களின் முழு ஆதரவை ஓ.பி.எஸ்சுக்கு பெற்றுத் தந்ததும் மைத்ரேயன் தான்.

மீண்டும் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்த போது கட்சியில் தமக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என மைத்ரேயன் எதிர்பார்த்தார். ஆனால் ஓபிஎஸ் கைவிட்டு விட, அதிருப்தியடைந்த மைத்ரேயன், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே கட்சியில் பட்டும் படாமலும் இருந்து வந்தார். இந்நிலையில், தமக்கு மீண்டும் ராஜ்யசபா பதவியாவது திடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவருக்கு அந்த வாய்ப்பும் இல்லாமல் போகவே நொந்து போயிருந்தார்.

இந்நிலையில் நேற்றுடன் மைத்ரேயனுடைய 18 ஆண்டுகால ராஜ்யசபா எம்.பி அந்தஸ்து முடிவடைந்தது. இதனால் நேற்று ராஜ்யசபாவில் தமது இறுதி உரை நிகழ்த்திய மைத்ரேயன் கண்ணீர் மல்க பல நினைவுகளை குறிப்பிட்டார். இலங்கையில்
உள்நாட்டுப்போரில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தாத இந்த சபையில், தனக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்க வேண்டாம் என்று மைத்ரேயன் உணர்ச்சிவயப்பட்டார். மேலும் ராஜ்யசபா வாழ்க்கை வேண்டுமானால் இன்று டன் அஸ்தமிக்கலாம். ஆனால் இனிமேல் தான் தமிழக அரசியலில் தமக்கு சூரியோதயம் பிரகாசிக்கப் போகிறது என்று சூசகமாக மைத்ரேயன் பேசியிருந்தார்.

சூரியோதயம் என்ற வார்த்தையை மைத்ரேயன் உச்சரித்தது தமிழக அரசியலில் பல்வேறு அர்த்தங்களை ஏற்படுத்திவிட்டது. மைத்ரேயன் திமுகவுக்கு செல்லப் போகிறார். திமுகவும் பாஜக பக்கம் சாயத் தயாராகிறது. அதற்குப் பாலமாக மைத்ரேயன் செயல்படத் தயாராகி விட்டார் என்றெல்லாம் பேச்சுகள் பரபரப்பாக அடிபடத் தொடங்கியது. ராஜ்யசபா எம்.பி.யாசி மீண்டும் டெல்லியில் கர்ஜிக்க சென்றுள்ள வைகோவும் பாஜக தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்ததும் இதே காரணம் தான் என்றும் பேச்சுகள் எழுந்துள்ளது.

இந்நிலையில், டெல்லியிலிருந்து விடைபெற்று இன்று சென்னை திரும்பிய மைத்ரேயன், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் நினைவிடம் முன் செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், அதிமுகவில் இணைந்த 20 ஆண்டுகளில் மூன்று முறை 3 முறை ராஜ்யசா எம்.பி. வாய்ப்பை ஜெயலலிதா தந்திருந்தார். அவரின் தூதராக டெல்லியில் திறமையாக செயல்பட்டேன். அதனால் ஜெயலலிதாவுக்கு நன்றி கூற,நேரில் அஞ்சலி செலுத்தி என் நன்றியை காணிக்கை ஆக்கியுள்ளேன்.

ராஜ்யசபாவில் 2009-ல் இருந்தே ஈழத்தமிழர் பிரச்னைக்கு குரல் கொடுத்துள்ளேன். எப்போதுமே நான் களப் போராட்டத்தில் இருப்பவன். மக்களவையில் நான் தென்சென்னையில் போட்டியிட விரும்பினேன். எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. ராஜ்யசபா எம்.பி.யாக மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அந்த வருத்தம் எனக்குள்ளது.

ஜெயலலிதா இருந்திருந்தால் எல்லாம் சிறப்பாக இருந்திருக்கும் என்ற எண்ணம் என்னிடம் உள்ளது போல் அதிமுகவில் உள்ள அனைவர் மனதிலும் உள்ளது என்று மைத்ரேயன் தமது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் மைத்ரேயன் ஏதோ ஒரு அதிரடி முடிவுக்கு தயாராகி விட்டார் என்றே அதிமுகவில் பரபரப்பான பேச்சாகிக் கிடக்கிறது.

ராஜ்யசபா : 5 எம்.பி.க்களின் பதவி இன்று நிறைவு; வைகோ உள்பட 6 பேர் நாளை பதவியேற்பு

You'r reading மீண்டும் எம்.பி வாய்ப்பு தராதது வருத்தம் அதிமுகவில் கலகக் குரல் எழுப்புகிறாரா மைத்ரேயன்..? ஜெ.சமாதி முன் குமுறல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை