இஸ்லாமிய பெண்களை, அவர்களின் கணவர்கள் ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்ட முத்தலாக் தடை சட்ட மசோதா, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது.கடந்த முறை இந்த மசோதாவுக்கு 37 அதிமுக எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இம்முறை அக் கட்சியின் ஒரே ஒரு எம்.பி.யான ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்தார்.
முத்தலாக் மசோதா பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கடந்தாண்டு டிசம்பரில் மக்களவையில் கொண்டு வரப்பட்டது. முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
குற்றச்சாட்டுக்கு உள்ளான கணவன்மார்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற ஷரத்து நீக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் மசோதா நிறைவேறியது.
ஆனால் மாநிலங்களவையில், பா.ஜ.க கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. இதனிடையில் மக்களவையின் பதவிக்காலம் முடிவடைந்து. மக்களவை கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆகிவிட்டது.
தற்போது புதிய அரசு பொறுப்பேற்று, மக்களவையின் முதல் கூட்டத்தொடரிலேயே முத்தலாக் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறியது. முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவாக 303 வாக்குகளும், எதிராக 82 வாக்குகள் பதிவாகின. முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த முறை மக்களவையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்ட போது அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது மக்களவையில் 37 எம்.பி.க்கள் பலத்துடன் அதிமுக இருந்தது. மசோதாவுக்கு வாக்கெடுப்பு நடந்த போது அதிமுக எம்பிக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.இந்நிலையில் இன்று இந்த மசோதாவுக்கு அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி.யான துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.