வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இறுதிக்கட்டமாக இன்று மாலை நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சி களின் தலைவர்கள் பங்கேற்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த ஒரு மாத காலத்தில் இந்தத் தொகுதியில் ரூ.3.57 கோடி பணம், பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
பணப்பட்டுவாடா புகாரால் மக்களவைப் பொதுத் தேர்தலின் போது வேலூர் தொகுதியில் கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இங்கு நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலைச் சின்னத்திலும் போட்டியிடுகிறார். இது தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உட்பட இந்தத் தொகுதியில் மொத்தம் 28 பேர் களத்தில் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அதிமுக சார்பில் ஒட்டுமொத்த அமைச்சர்களும், மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வேலூரில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் இரண்டு கட்டமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாகவும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் என ஏராளமானோர் முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கி விட்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இரண்டு கட்டமாக மொத்தம் 5 நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடைசி நாளான இன்று வேலூரில் திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு ஓய்ந்த நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 5-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் நடைபெறும் என்றும், இன்று மாலை முதல் வாக்குப்பதிவு நேரம் முடிவடையும் வரை கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சாகு தெரிவித்தார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காலத்தில் கணக்கில் காட்டப்படாத ரூ 3.57 கோடி பணமும், 89 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பிடிபட்டதாகவும் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.