நாடாளுமன்றத்தில் தனது பேச்சில் குறுக்கிட முயன்ற அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத்தை, முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு விமர்சித்தார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற மக்களவையில் காஷ்மீர் விவகாரம் குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. பிரிவு 370ஐ ரத்து செய்யும் தீர்மானம், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவற்றின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும் போது, ‘‘உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் என்று கேள்வி எழுப்பினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது அதிமுகவின் ஒரே உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத் எழுந்து குறுக்கிட முயன்றார்.
அதைப் பார்த்து ஆவேசமடைந்த டி.ஆர்.பாலு, "விழிப்புணர்வு கொண்ட மக்கள் பேசுகிறார்கள். நீங்கள் உட்காருங்கள். முதுகெலும்பு இல்லாத நீங்கள் எதற்கு எழுகிறீர்கள். நாங்கள் முதுகெலும்பு உள்ளவர்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்" எனக் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரவீந்திரநாத் பேச முயன்றார்.
ஆனால், டி.ஆர்.பாலு அவரை பேச விடாமல், ‘‘முதுகெலும்பு இல்லாத..’’ என்று சத்தம் போட்டார். உடனே, திமுக உறுப்பினர் கனிமொழியும் எழுந்து சபாநாயகரிடம், ‘‘ரவீந்திரநாத் எதற்கு பேசுகிறார்?’’ என்று கேட்டார். அப்போது டி.ஆர்.பாலுவும், ‘‘எங்களுக்கு எல்லாம் முதுகெலும்பு இருப்பதால், எங்களை இந்த விவாதத்தில் பேச நீங்கள் அனுமதித்துள்ளீர்கள்.
இந்த அவை முதுகெலும்பு உடையவர்களால் நிரம்பியது. ஆனால், முதுகெலும்பு இல்லாதவர்கள் ஏன் எழுகிறார்கள்’’ என்று மீண்டும் கிண்டலடிக்கவே அவையி்ல் சிரிப்பலை எழுந்தது.
சபாநாயகரும் ரவீந்திரநாத்தைப் பார்த்து அமரச் சொல்லி விட்டு, டி.ஆர்.பாலுவிடம் காஷ்மீர் விவகாரத்துக்கு வரச் சொன்னார். இதற்கு டி.ஆர்.பாலு, ‘‘ஐயாம் சாரி, இங்கே எனது சீனியர் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் நிறைய கற்றிருக்கிறேன்...’’ என்று கூறி பேச்சை தொடர்ந்தார். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.