செரிமான பிரச்னை சார்ந்த வயிறு உப்பசம், நெஞ்செரிச்சல், வாயு கோளாறு, குமட்டல், அடிவயிற்றின் மேற்பக்கம் வலி அல்லது நெஞ்சில் வலி போன்றவை சில நேரங்களில் பித்தப்பை கற்களின் அறிகுறியாக இருக்கக்கூடும். இதற்கென்று தனி அறிகுறிகள் இல்லை. இந்தப் பாதிப்புகள் செரிமான கோளாறுக்கும் இருக்கும். ஆகவே, பெரும்பாலும் பித்தப்பை கற்களால் வரும் பிரச்னை, செரிமான கோளாறு என்றே தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது.
பித்தப்பை
பித்தநீர் ஈரலில் சுரக்கிறது. பித்தநீர், நம் செரிமானத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். நம் உடலில் ஈரலின் கீழ்ப்பகுதியில் இணைந்திருக்கும் சிறிய உறுப்பு பித்தப்பை ஆகும். பசுமை கலந்த மஞ்சள் நிற திரவமான பித்தநீரை சேமித்து வைப்பது இதன் வேலையாகும்.
பித்தப்பை கற்கள்
பித்தநீர், பித்தப்பைக்குள் வரும்போது சிலவேளைகளில் இறுகி திடவடிவத்தை அடைகிறது. மணல் போன்று பிறகு சிறுசிறு தானியங்கள் போன்று சேரும் இவை பிறகு சிறு கூழாங்கற்கள் அளவுக்கு மாறுகின்றன. இறுகிய வடிவம் கொள்ளும்போது அவை பித்தப்பை கற்கள் என்று அழைக்கப்படுகின்றன. பித்தநீரில் கலந்திருக்க வேண்டிய பொருள்களின் அளவு மாறும்போது, அவை வெளியேறும் அளவு குறைவுபடுகிறது அல்லது பித்தப்பையின் செயல்பாடு குறையும்போது பித்தநீர் வெளியேறும் அளவு குறைகிறது. பித்தநீர் வெளியேறுவது குறையும்போது பித்தப்பை கற்கள் தோன்றுகின்றன.
பித்தப்பை கற்களும் ஆபத்தும்
பித்தப்பை கற்களால் ஆபத்து இல்லை என்ற நிலையே காணப்படும். ஆனால், இவை வெளியேறாமல் உள்ளே தங்கி, சிலவேளைகளில் பித்தப்பையையே கிழித்துவிடக்கூடிய அபாயம் உண்டு. பித்தப்பை கிழிவதால் மரணம் நேரக்கூடிய ஆபத்து விளையலாம்.
பித்தப்பையின் உள்ளே இருக்கும் கற்கள் அசையும்போது பித்தப்பையின் வாயிலை அடைத்துக்கொண்டு பித்தநீர் வெளியேறாமல் தடுக்கின்றன. தொடர்ந்து அவை வெளியேற முயற்சிக்கும்போது பித்தப்பை பாதிக்கப்பட்டு தொற்று ஏற்படுகிறது.
பித்தப்பையில் நோய்தொற்று ஏற்பட்டு, சிகிச்சையளிக்கப்படாவிட்டால் சுற்றியுள்ள உறுப்புகளுக்கும் தொற்று பரவி பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
கவனிக்கவேண்டியவை நான்கு
பெண் (female), நாற்பது வயது (forty), கொழுப்பு உணவு (favours fatty food), முன்னோருக்கு பித்தப்பை கல் பிரச்னை (family member with gallstones) என்பவை பித்தப்பை கற்கள் விஷயத்தில் கவனிக்கவேண்டியவை ஆகும். ஆங்கிலத்தில் நான்கு 'F' என்று இதை கூறுகின்றனர். இந்த நான்கு காரணிகளும் இருந்தாலும் பித்தப்பை கற்கள் உருவாவதற்கு வாய்ப்பு அதிகம்.
காரணிகள்
நீரிழிவு, ஈரல் குறைபாடு, தைராய்டு குறைபாடு, தாலஸீமியா என்ற இரத்த குறைபாடு போன்றவையும் பித்தப்பை கற்கள் உருவாக காரணமாகலாம். கொழுப்பு அதிகமுள்ள உணவு பொருள்கள் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு அமிலங்கள் சமநிலையை குலைத்து பித்தப்பை கற்கள் உருவாக காரணமாகக்கூடும். திடீரென எடையை குறைக்கும் முனைப்பில் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பவர்களுக்கும் பித்தநீர் வெளியேறுவதில் குறைபாடு ஏற்பட்டு பித்தப்பை கற்கள் உருவாகலாம்.
கடைபிடிக்க வேண்டியவை
குறைந்த கொழுப்பு அடங்கிய உணவு பழக்கம், நார்ச்சத்து மிக்க உணவு பொருள்கள், பழங்கள் ஆகியவற்றை உண்ணவேண்டும்.சாப்பாட்டில் நேர ஒழுங்கை கடைபிடிக்கவேண்டும். சரியான உடல் எடையை பராமரித்தால் பித்தப்பை கற்கள் உருவாவதை தவிர்க்கலாம்.