ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன. அதே போல், பள்ளிகள் வரும் 19ம் ேததி முதல் திறக்கப்படும் என்று ஏ.என்.ஐ. செய்தி கூறுகிறது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370, 35ஏ ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, 22 மாவட்டங்களிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஒரு வாரத்திற்்கும்் மேலாக மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்து போயுள்ளது. இந்நிலையில், காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமென்று கோரி, அம்மாநில பத்திரிகையாளர்கள் உள்பட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் சீனியர் வக்கீல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘காஷ்மீரில் தற்போதுள்ள நிலைமை சீரடைய சிறிது நாட்கள் ஆகும். பாதுகாப்பு படைகள் தங்கள் பணியை செய்ய நாம் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். அதற்குள் நீதிமன்றத்திற்கு வந்து அரசுக்கு எதிராக பேசக் கூடாது’’ என்றார். இதன்பின், வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களை இன்று முதல் திறந்து வழக்கம் போல் செயல்படுவதற்கு கவர்னர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி தெரிவிக்கிறது. மேலும், வரும் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதாகவும், அந்த செய்தி தெரிவிக்கிறது.