மக்களிடம் நேரடியாக அதிகாரிகள் குழு சென்று மனுக்களை பெற்று கொள்ளும் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்துள்ளார்.
சேலம் பெரிய சோரகை பகுதியிலுள்ள கோயிலுக்கு வந்த முதலமைச்சர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். அங்கு நடந்த விழாவில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:
மக்களிடம் அதிகாரிகள் குழு நேரடியாக சென்று குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். இதன்படி, நகரங்களில் உள்ள வார்டுகள், கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று பொது மக்களிடம் மனுக்கள் பெறப்படும். அந்த மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய், ஊரக, நகர்புற வளர்ச்சி துறையை சேர்ந்த அலுவலர்கள் குழு, மக்களிடம் நேரடியாக மனுக்களை பெறுவார்கள்.
மனுக்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒரு வாரத்திற்குள் அனுப்பப்பட்டு, தீர்வு காணப்படும். இந்த திட்டத்திற்்கு ரூ.76.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் 234 தொகுதிகளிலும் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.