வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழை கங்கை, யமுனை கடும் வெள்ளப்பெருக்கு

by Nagaraj, Aug 19, 2019, 12:23 PM IST

பருவமழை தீவிரமடைந்திருப்பதால் வடமாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மகாராஷ்ட்டிரா, உ.பி. இமாச்சல், உத்தரகண்ட், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் ,அரியானா டெல்லி என வடமாநிலங்களில் பலத்த மழை கொட்டியுள்ளது.

மலைப்பிரதேசங்களான உத்தரகாண்ட், இமாச்சலில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதால் முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மழை, வெள்ளம், நிலச்சரிவால் இமாச்சலில் 22 பேரும், உத்தரகாண்டில் 25 பேரும் பலியான நிலையில், வெள்ளச்சேதமும் அதிகரித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால், இமாச்சல், உத்தரகாண்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் கங்கை,யமுனை மற்றும் காக்ரா ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்கள் பல வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஆற்றுப்பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

தலைநகர் டெல்லியிலும் கன மழை கொட்டி வருகிறது. இன்றும் இடியுடன் கூடிய கனமழை கொட்டும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் யமுனை நதியிலும் அபாய கட்டத்தை கடந்து வெள்ளம் ஓடுவதால்,
டில்லி பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல் கங்கை, யமுனை நதிகள் பாயும் பிற மாநிலங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

READ MORE ABOUT :

Leave a reply