25 வருஷம் மோடி ஆட்சிதான் கோவா முதலமைச்சர் அறிவிப்பு?

by எஸ். எம். கணபதி, Aug 19, 2019, 12:17 PM IST

அடுத்த தேர்தலிலும் அதிமுகதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதையே நம்ம மக்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கிறார்கள். ஆனால், கோவா முதலமைச்சர் பிரமோத் சவந்த், அவரையே மிஞ்சி விட்டார். ‘இன்னும் 25 வருஷத்துக்கு மோடி ஆட்சிதான் நடக்கும்’ என்று சவந்த் கூறியிருக்கிறார்.

கோவாவின் பனாஜியில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சவுகான் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கோவா முதலமைச்சர் பிரமோத் சவந்த் பேசுகையில், ‘‘பிரதமர் மோடி தற்போது அதிடிரயாக திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மோடி அரசு இன்னும் பல திட்டங்களை விரைவில் செயல்படுத்தவிருக்கிறது. அந்த திட்டங்களும் செயல்படுத்தப்பட்ட பின்பு, பிரதமர் பதவியில் இருந்து மோடியை மாற்றுவதற்கு யாருமே இருக்க மாட்டார்கள். இப்போதே நாடு முழுவதும் மக்கள் மோடி ஆட்சியால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள்.

பாஜக உறுப்பினர் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடி ஆட்சிதான் என்று ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் முடிவு செய்து விட்டார்கள். எனவே, 25 வருஷத்துக்கு மோடியை யாரும் அசைக்க முடியாது’’ என்றார்.

அத்துடன் நிற்கவில்லை. மத்தியப் பிரதேசத்தில் விரைவில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்து, சவுகான் தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி வரும் என்றும் சவந்த் கூறினார்.

பதற்றத்தை தணிக்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்; பாகிஸ்தானுக்கு டிரம்ப் அறிவுரை


Leave a reply