பீகாரில் ஒரு எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.47 மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமறைவான அவர் 4 நாளில் சரணடைவேன் என்று வீடியோவில் பேசி, சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு மொகாமா சட்டப்பேரவை தொகுதியில் ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பி்ல் 2005 தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆனந்த் சிங். அதன்பின்பு, 2015ல் நிதிஷ்குமாரும், லாலுவும் கூட்டணி சேர்ந்த போது, ஆனந்த்சிங்குக்கு சீட் தரக் கூடாது என்று லாலு நிர்ப்பந்தம் செய்தார். இதனால், ஆனந்த் சிங்கிற்கு நிதிஷ்குமார் சீட் தரவில்லை. அந்த பகுதியில் தாதாவாக விளங்கிய ஆனந்த் சிங், சுயேச்சையாக போட்டியிட்டு எம்எல்ஏவாகி விட்டார். அவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், அவரது சொந்த ஊரான நாட்வா கிராமத்தில் பாட்டி வீட்டில் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பாட்னா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாஜிஸ்திரேட் ஒருவர் முன்னிலையில் அந்த வீட்டின் பூட்டை உடைத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.
இது பற்றி ஆனந்த்சிங் கூறுகையில், ‘‘எனது மனைவி நீலம் சிங் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் லாலன்சிங்கை எதிர்த்து போட்டியிட்டார். அதனால்தான், என் மீது ஆத்திரப்பட்டு, எனது பாட்டி வீட்டை இடித்து சோதனை நடத்தியுள்ளனர். நான் அந்த வீ்ட்டுக்கு போய் பல ஆண்டுகளாகி விட்டது. அங்கு என்ன இருந்தது என்பது எனக்கு தெரியாது’’ என்று கூறினார்.
இதை மறுத்த ேபாலீசார், ஆனந்த் சிங் மீது ஆயுதங்கள் தடைச் சட்டம், வெடிபொருட்கள் சட்டம் மற்றும் இ.பி.கோ பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதையடுத்து, தலைமறைவான ஆனந்த் சிங், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘என் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்கள். எனக்கு எந்த பயமும் இல்லை. நான் 3 அல்லது 4 நாட்களில் சரணடைவேன்’’ என்று பேசியிருக்கிறார். தற்போது அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சாதனைகளை புரிய வாய்ப்புகள் ஏராளம்; பூடான் மாணவர்களிடம் மோடி பேச்சு