காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீடிப்பு அலுவலகங்கள், பள்ளிகள் திறப்பு

by எஸ். எம். கணபதி, Aug 19, 2019, 11:31 AM IST

காஷ்மீரில் கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக தளர்த்தப்படவில்லை. வதந்திகள் பரவியதால், சில இடங்களில் மீண்டும் இணையதளம் மற்றும் தொலைபேசி வசதி துண்டிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறக்கப்பட்டன.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவை ஆக.5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அத்துடன், அந்த மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால், முன்கூட்டியே முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு இன்னமும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த 2 வாரங்களாக தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, ஸ்ரீநகர் உள்பட 22 மாவட்டங்களிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடந்த 2 வாரங்களாக மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்து போயிருந்தது. இதனால், காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று கோரி, அம்மாநில பத்திரிகையாளர்கள் உள்பட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில், ‘காஷ்மீரில் கட்டுப்பாடுகள் சில நாட்களில் தளர்த்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகர் உள்பட சில நகரங்களில் இணையதளம் மற்றும் தொலைபேசி சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை(ஆக.16) ஸ்ரீநகரில் அரசு தலைமைச் செயலகம் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இது குறித்து, காவல்துறை துணை ஆணையர் சாகித் இக்பால் கூறுகையில், ‘‘பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த பின்பு, ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள 900 ஆரம்பப் பள்ளிகளில் 196 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கொஞ்சம், கொஞ்சமாக மற்ற பள்ளிகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கேட்டுக் கொண்டிருக்கிறோம். அரசு அலுவலகங்கள் அனைத்தும் இன்று முதல் செயல்படுகின்றன’’ என்றார்.

இதற்கிடையே, ஸ்ரீநகரில் சில இடங்களில் தேவையற்ற வதந்திகள் பரப்பப்பட்டதால், மீண்டும் இணையதளம் மற்றும் தொலைபேசி சேவை முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்முவில் மொபைல், இன்டர்நெட் மீண்டும் செயல்படத் தொடங்கியது


Leave a reply