காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க சில நாட்கள் அவகாசம் தேவை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கோரிக்கை

Shouldnt jump the gun, Centre tells Supreme Court on petitions against Article 370

by எஸ். எம். கணபதி, Aug 16, 2019, 12:14 PM IST

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும், நிலைமை சீரடைவதற்கும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370, 35ஏ ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, 22 மாவட்டங்களிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஒரு வாரத்திற்்கும்் மேலாக மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்து போயுள்ளது. இந்நிலையில், காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமென்று கோரி, அம்மாநில பத்திரிகையாளர்கள் உள்பட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் சீனியர் வக்கீல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘காஷ்மீரில் தற்போதுள்ள நிலைமை சீரடைய சிறிது நாட்கள் ஆகும். பாதுகாப்பு படைகள் தங்கள் பணியை செய்ய நாம் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். அதற்குள் நீதிமன்றத்திற்கு வந்து அரசுக்கு எதிராக பேசக் கூடாது’’ என்றார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கூறுகையில், ‘‘கோப்புகளை பார்த்தால் தற்போது நிலைமை ஓரளவுக்கு மாறியிருப்பதாக தெரிகிறது. இன்று மாலைக்குள் தொலைபேசி இணைப்புகள் செயல்படத் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, அரசுக்கு சில நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

நீதிபதி பாப்டே கூறுகையில், ‘‘ஜம்மு காஷ்மீரில் இப்போதே தொலைபேசிகள் செயல்படுவதாக தெரிகிறது. இன்று காலையில் அம்மாநில தலைமை நீதிபதி என்னுடன் தொலைபேசியில் பேசினார்’’என்றார்.

முன்னதாக, அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், ‘‘இந்த வழக்கின் அபிடவிட்டைப் பார்த்தால் இது என்ன வழக்கு என்று கேட்கத் தோன்றுகிறது. இதில் அடிப்படை எதுவுமே இல்லாததால், விசாரணைக்கே உகந்ததாக தெரியவில்லை’’ என்று கூறினார். பின்னர், இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

பிரிவு 370ஐ நீக்கியதை எதிர்த்து உமர் அப்துல்லா கட்சி வழக்கு; உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

You'r reading காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க சில நாட்கள் அவகாசம் தேவை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கோரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை