அத்திவரதர் தரிசனம், 47வது நாளான இன்றுடன் முடிவடைகிறது. நாளை, கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசன பெரு விழா, ஜூலை 1ம் தேதி தொடங்கியது. கடந்த 31ம் தேதி வரை அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி அளித்தார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் தினம் ஒரு பட்டாடை உடுத்தி, மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார்.
அத்திவரதர் தரிசனத்தின் 47-வது நாளான இன்று மஞ்சள்-ரோஜா நிற பட்டாடை அணிந்து, மல்லிகை, முல்லை, ரோஜா மலர் அலங்காரத்தில் காட்சி தருகிறார். இன்று வி.ஐ.பி.க்கள் தரிசனம் கிடையாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால், பொது தரிசனத்தில் கூட்டம் அலைமோதுகிறது. காலை 5.30 மணி முதல் தொடர்ந்து அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது.
இந்த 47 நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்து அத்திவரதரை தரிசித்து சென்றுள்ளனர். இன்றுடன் பொது மக்கள் தரிசனமும் முடிவடைகிறது. இன்று நள்ளிரவு வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை, ஆகமவிதிகளின்படி பூஜைகள் செய்த பின்பு கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.