காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா, ஜூலை 1ம் தேதி தொடங்கியது. கடந்த 31ம் தேதி வரை அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி அளித்தார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் தினம் ஒரு பட்டாடை உடுத்தி, மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார்.
அத்திவரதர் தரிசனத்தின் 44-வது நாளான இன்று இளம் பச்சை மற்றும் இளம் சிவப்பு நிற பட்டாடை அணிந்து, மனோரஞ்சித மாலை, துளசி மாலைகளுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். பக்ரீத் விடுமுறை நாளான நேற்று மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டதால் காஞ்சி நகரமே திக்குமுக்காடிப் போனது.
அத்திவரதர் தரிசனம் 16ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இன்னும் 4 நாட்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பதால் காஞ்சிபுரத்தில் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதிகாலையிலேயே 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டிருந்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் வரலாறு காணாத அளவுக்கு காணப்பட்டது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசல்களை சமாளிக்க முடியாமல் ேபாலீசார் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் பிரபாகரன், நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பாக ஆஜராகி கோரிக்கை விடுத்தார். அதை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்வதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
அத்திவரதர் தரிசனத்திற்கு 16, 17ம் தேதிகளில் விஐபிகளுக்கு அனுமதியில்லை