அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு

PlL filed in high court to extend atthivaradar dharsan

by எஸ். எம். கணபதி, Aug 15, 2019, 21:28 PM IST

அத்திவரதர் தரிசனம் 17ம் தேதி முடியும் நிலையில், அதை நீட்டிக்க வேண்டுமென்று கோரி ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடப்பட்டுள்ளது.

வைணவர்களால் 108 புண்ணிய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் குளத்தில் இருந்து வெளியே வந்த அத்திவரதர், இம்மாதம் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனக் கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், ஆக.1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். அத்திவரதர் தரிசனம் ஆகஸ்ட் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதை நீட்டிக்க வேண்டுமென்று ஏற்கனவே ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.

இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரி, உயர்நீதிமன்றத்தில் மீண்டும் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘கடந்த 1937ம் ஆண்டு குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை 40 நாட்கள் பூஜை செய்யப்பட்டு மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது. மீண்டும் 42 ஆண்டுகளுக்கு பின்பு, 1979ல் மீண்டும் சிலை எடுக்கப்பட்டு, அத்திவரதர் தரிசன விழா நடந்தது. அப்போது 13 ஆயிரம் பக்தர்கள் தரிசித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் 40 நாட்களில் இருந்து 48 நாட்களாக தரிசனம் நீட்டிக்கப்பட்டது. எனவே, தரிசன நாட்களை நீட்டிப்பதால் எந்த ஆகமவிதிகளும் மீறப்படுவதாகாது.

தற்போது தினமும் 5 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, தரிசன நாட்களை நீட்டிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பாக நாளை விசாரணைக்கு வருகிறது.

You'r reading அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை