சென்னையில் கடலின் நிறம் நீல நிறமாக மாறி ஜொலிப்பதாக பரவிய தகவலால் திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் நள்ளிரவில் திடீரென பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் நேற்றிரவு கடலின் நிறம் திடீரென கரு நீல நிறமாக மாறி ஜொலிப்பதாக சமூக வலைதளங்களில் படங்கள் , வீடியோக்களுடன் தீயாக செய்திகள் பரவியது. இதனால் ஆர்வக் கோளாறில் நள்ளிரவு நேரத்திலும் சென்னைவாசிகள் ஏராளமானோர் கடற்கரைப் பகுதிகளுக்கு படையெடுத்தனர்.
திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரைகளில் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் குவிந்தனர்.கடல் அலைகள் நிறம் மாறியுள்ளதை ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன், மொபைல் போன்களில் படம் பிடிப்பதிலும் ஆர்வம் காட்டினர். இந்த புகைப்படங்களை தங்கள் நண்பர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் அனுப்பியதால் கூட்டம் மேலும் அலைமோதத் தொடங்கியதால் பரபரப்பு அதிகரித்தது.
பாக்டீரியா கிருமிகளால் கடலின் நிறம் திடீரென நீலம் மற்றும் மஞ்சள் நிறமாக மாறுவது உலகின் பல பகுதிகளில் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். தமிழ்நாட்டிற்கு இது புதியதாக தெரிகிறது. இதனால் எந்த பாதிப்பும் இருக்காது என்று கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.