கர்நாடக அமைச்சர்கள் பட்டியல் ஒரு வழியாக தயார் முதற்கட்டமாக 15 பேர் நாளை பதவியேற்பு

கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்று 25 நாட்கள் கடந்த நிலையிலும் இழுபறியாகவே இருந்து வந்த அமைச்சர்கள் தயாரிப்பு பட்டியல் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக 15 அமைச்சர்கள் நாளை பதவியேற்க உள்ளனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனால் சட்டப்பேரவையில் கூடுதல் எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் பாஜக ஆட்சி அமைந்தது. முதல்வராக எடியூரப்பா கடந்த 26-ந்தேதி பதவியேற்றார். ஆனால் எடியூரப்பா பதவியேற்று 25 நாட்களை கடந்த நிலையிலும் அமைச்சர்கள் யார்? யார்? என்பதை முடிவு செய்வதில் இழுபறியாகவே இருந்து வந்தது.

அமைச்சர் பதவிக்காக பாஜக எம்எல்ஏக்கள் பலர் மேலிடத்திலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூலம் நெருக்கடி கொடுத்ததே இழுபறிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் எடியூரப்பாவோ தனது ஆதரவாளர்கள் பலரை அமைச்சர்களாக்க முயல, அதற்கும் பாஜக மேலிடம் முட்டுக்கட்டை போட்டுவிட்டது. இதனால் 2 முறை டெல்லி சென்றும் பட்டியலை இறுதி செய்ய முடியாமல் எடியூரப்பா வெறுங்கையுடனே திரும்பினார்.

இதற்கிடையில் கர்நாடகத்தில் பெய்த கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகி பெரும் சேதம் ஏற்பட்டது. அமைச்சர்கள் யாரும் இல்லாத நிலையில், முதல்வர் எடியூரப்பா மட்டுமே தன்னந்தனியாக இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள நேர்ந்தது.மேலும் 3 தடவை அமைச்சரவைக் கூட்டம் என்று பல்வேறு துறைகளின் செயலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு தனி ஆளாக கூட்டம் போட்டதையும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன.

இந்நிலையில் கடந்த வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களும் டெல்லியில் முகாமிட்ட எடியூரப்பா, பாஜக தலைவர் அமித்ஷா வை சந்தித்து, ஒரு வழியாக முதற்கட்ட அமைச்சரவை பட்டியலுக்கு ஒப்புதல் பெற்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்று பிற்பகல் 15 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியல் வெளியாகும் என்றும் நாளை மாலை 4 மணிக்கு அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெறுபவர்களில் பாதிப்பேர் புதுமுகம் என்றும் கூறப்படுகிறது. மூத்த பாஜக தலைவர்களான ஈஸ்வரப்பா, அசோகா, ஸ்ரீராமுலு, கோவிந்தகார ஜோல் போன்றோருக்கும் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதவி நீக்கத்துக்கு ஆளான காங்கிரஸ் மற்றும் ஜனதா தள எம்எல்ஏக்கள், உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்., இந்த வழக்கில் தீர்ப்பு வெளியான பின்னர் இரண்டாவது கட்டமாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இவர்களில் பாதிப்பேருக்கு அமைச்சர் பதவி ஆசை காட்டித்தான் பாஜக இவர்களை தங்கள் பக்கம் இழுத்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக புதிய சபாநாயகரானார் விஷ்வேஸ்வர் ஹெக்டே ; போட்டியின்றி தேர்வானார்


Leave a reply