பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதும், அண்டை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முக்கியத்துவமாக கொண்டுள்ளார். பதவியேற்ற சில நாட்களிலேயே மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
தொடர்ந்து, கிர்கிஸ்தான் நாட்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார். அங்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் முக்கியப் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
இந்நிலையில், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் சென்றார். பூடானின் பாரோ விமான நிலையம் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் பிரதமர் லோடேய் ஷெரீங் மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து பூடான் மன்னர் அரண்மனைக்கு சென்ற பிரதமருக்கு, வழி நெடுகிலும் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் இந்திய மூவர்ண கொடி மற்றும் பூடான் நாட்டுக் கொடிகளை அசைத்தபடி வரவேற்பளித்தனர்.
இதன்பின், அந்நாட்டு பிரதமர் லோடேய் ஷெரிங்குடன் மோடி நடத்திய பேச்சுவார்த்தையின் போது 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தகவல் தொழில்நுட்பம், விண்வெளி, விமானப் போக்குவரத்து கல்வி, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்நிலையில், 2-வது நாளான அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ‘‘பூடானின் எதிர்காலம் அந்நாட்டு இளைஞர்கள் கையில் பத்திரமாக இருப்பதை தாம் உணர்கிறேன். பூடான் நாட்டின் இயற்கை அழகு, ரம்மியம், மக்களின் எளிமை ஆகியவை அனைத்துத் தரப்பினரையும் கவரும். இந்த உலகில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. நிறைய சாதனைகளை புரிவதற்கு ஏற்ற சக்தியும், சாத்தியக்கூறுகளும் உங்களுக்கு கிடைத்துள்ளது. பூடான் விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வந்து செயற்கைக்கோள் வடிவமைப்புகளில் ஈடுபடலாம்’’ என்றார்.