கேரளாவில் ஐந்து மாவட்டங்களில், மீண்டும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் அதிதீவிர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கேரளவாசிகள் மீண்டும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கேரளாவில் ஒரு வாரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த மழையின் கோரப் பிடியில் சிக்கி, லட்சக்கணக்கானோர் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகினர்.மழை, வௌ்ளத்துடன், நிலச்சரிவும் சேர்ந்து கொண்டதால், பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி விட்டது.மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலபாரா என்ற மலை கிராமத்தில், நிலச்சரிவு ஏற்பட்டு,50 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில், 40-க்கும் மேற்பட்டோர், உயிருடன் மண்ணில் புதைந்தனர்.மாநிலத்தின் பல பகுதிகளில், 2.5 லட்சம் பேர், நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
2 நாட்களாக மழை சற்று ஓய்ந்த நிலையில் முகாம்களில் தங்கியிருந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப ஆரம்பித்தனர். வெள்ளம் புகுந்ததால், வீடுகளில் இருந்த பொருட்கள் நாசமாகி அலங்கோலமாக காட்சியளிப்பதை சரி செய்யும் பணிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவின் மலப்புரம், வயநாடு, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கேரளா மட்டுமின்றி இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள மாநிலங்களிலும், அதிதீவிர மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக சற்று நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர் கேரள மக்கள் . இந்நிலையில் இன்றும், நாளையும் மீண்டும் அதிதீவிர கன மழை பெய்யும் என்ற எச்சரிக்கையால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வெள்ளம், நிலச்சரிவால் தத்தளிக்கும் கேரளா ; வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி