கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கன மழை கொட்டித்தீர்த்து அம்மாநில மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து, மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான வயநாடு மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், நாளை அங்கு அவர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத கனமழை கேரளா கொட்டித்தீர்த்தது. வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவாலும் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பயிர்கள், பொருட்சேதம் அம்மாநில அல்லாட வைத்தது. உணவு, குடிநீருக்கே பல நாட்கள் திண்டாடிய கேரள வாசிகளுக்கு, தமிழகம் போன்ற அண்டை மாநிலத்தவரின் ஆதவுக்கரத்தால் ஒரு வழியாக மீண்டனர். ஆனாலும் கடந்தாண்டு ஏற்பட்ட இழப்புகளில் இருந்து முழுவதும் மீள முடியாத நிலையில் இருக்கும் கேரளாவுக்கு இந்த ஆண்டும் கனமழையால் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
கடந்தாண்டை விட, தற்போது கொட்டித் தீர்க்கும் மழையால் பாதிப்புகள் கூடுதலாகவே உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, கொச்சி/பத்தனம்திட்டா,இடுக்கி உள்பட பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சில மலைக்கிராமங்கள் நிலச்சரிவில் காணாமல் போய் விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் மண்ணில் புதையுண்டு நூற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வயநாடு மாவட்டம் புத்தமலை பகுதியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளன. இதேபோல் மலப்புரம் மாவட்டம் பவளப்பாறையில் 3 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், கேரளாவில் மொத்தம் இதுவரை உயிரிழந்த 40 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடரும் கனமழை காரணமாக மீட்புப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் சிரமங்களுக்கு இடையே தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், ராணுவத்தினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கிடையே வெள்ள பாதிப்புகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் கூற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை வயநாடு செல்ல உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடகா, கேரளாவில் கொட்டித் தீர்க்கிறது கன மழை; காவிரியில் 55 ஆயிரம் கன அடி நீர் திறப்பு