தனது மருமகனும், தொழிலதிபருமான ரதுல் புரியை அமலாக்கத் துறையினர் கைது செய்ததற்கு ம.பி. முதலமைச்சர் கமல்நாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் உள்ளார். இவரது அக்கா நீட்டா புரியின் மகனும் தொழிலதிபருமான ரதுல் புரி, ‘மோசர் பியர்’ என்ற டிவிடி தயாரிப்பு கம்பெனியில் செயல் இயக்குனராக இருந்தார்.
இந்த கம்பெனி பல்வேறு வங்கிகளில் ரூ.354 கோடி வரை முறைகேடாக கடன் பெற்று மோசடி செய்ததாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா புகார் கூறியது. இது தொடர்பாக, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.
இந்நிலையில், ரதுல் புரி மற்றும் கம்பெனி இயக்குனர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களை மறுவரையரை செய்வதற்காக மோசடி செய்துள்ளதாக அமலாக்கப் பிரிவும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இதைத் தொடர்ந்து ரதுல் புரியை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இது குறித்து ம.பி.முதலமைச்சர் கமல்நாத் கூறுகையில், ‘‘ரதுல் புரி குடும்பத்தினர் செய்யும் தொழிலில் எனக்கு தொடர்பு இல்லை. இருந்தாலும் ரதுல் புரியை கைது செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது. நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நீதிமன்றம் இந்த விஷயத்தில் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்’’ என்றார்.
காங்கிரஸ் கட்சித் தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு? நாளை செயற்குழுவில் முடிவு