சிபிஐ துரத்தல்... ப.சிதம்பரம் தலைமறைவாகி விட்டார் சு.சாமி கிண்டல்

by Nagaraj, Aug 21, 2019, 10:27 AM IST
Share Tweet Whatsapp

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமின் மறுக்கப்பட்டதால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமறைவாகி விட்டதாக, சுப்ரமணிய சாமி டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து விட்டது. இதனால் அவரை கைது செய்து விசாரணை நடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு நேற்று நள்ளிரவில் சிபிஐ அதிகாரிகள் சென்றனர். ஆனால் ப.சிதம்பரம் வீட்டில் இல்லை. அவரை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.

இதனால் வீட்டின் வெளியே நோட்டீசை சிபிஐ அதிகாரிகள் ஒட்டிவிட்டு சென்றனர். அடுத்த 2 மணி நேரத்திற்குள் ப.சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ப.சிதம்பரம் எந்நேரமும் கைதாகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்பதும் மர்மமாக உள்ளது.

தம்மை கைது செய்ய தடை விதிக்கக் கோரியும், முன்ஜாமீன் கேட்டும் ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்பது ப.சிதம்பரத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனாலேயே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் கண்ணில் படாமல் ப.சிதம்பரம் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ப.சிதம்பரம் தலைமறைவானது குறித்து, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி டுவீட்டரில் கிண்டலாக பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். அதில், நேர்மையற்ற சிதம்பரம் தலைமறைவாகி உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தவரை சிபிஐயும் அமலாக்கத்துறையும் வலை வீசி தேடி வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

சுப்ரமணிய சாமி தமது மற்றொரு டுவிட்டர் பதிவில், ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கை விசாரித்தது அமலாக்கத்துறையின் இணை இயக்குனர் டாக்டர்.ராஜேஷ்வர் சிங். இந்த வழக்கை விசாரித்த காரணத்திற்காக அவருக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. லக்னோவிற்கு டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது தான் அவருக்கு அளிக்கப்பட்ட பரிசு. கலியுகம்! என சுப்பிரமணிய சாமி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என சிபிஐ நோட்டீஸ் கொடுத்தும் ப.சிதம்பரம் ஆஜராகவில்லை. இதனால் சிபிஐ அதிகாரிகள் இன்று காலையிலும் டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


Leave a reply