மத்திய அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் எனவும் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவரை கைது செய்து விசாரிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். நேற்றிரவு ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்ற போது அவர் அங்கு இல்லை. 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என கூறியும் இதுவரை சிதம்பரம் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் அதிகாரிகள் தேடி வருகின்றனர். இதுவரை 4 முறை ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றும் சிபிஐ அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.
இதற்கிடையே ப.சிதம்பரத்துக்கு சிபிஐ அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருவதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மிகப் பெரும் தகுதி படைத்த மதிப்பிற்குரிய ராஜ்யசபா உறுப்பினரான ப.சிதம்பரம், நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்காக நேர்மையுடன் பணியாற்றி உள்ளார். எவ்வித அச்சமும் இன்றி மத்திய அரசின் தோல்விகள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தி பேசி வருகிறார். இந்த உண்மைகளை ஏற்க முடியாமல் மத்திய அரசு,அவரை வேட்டையாட துடிப்பது வெட்கக் கேடானது. நாங்கள் ப.சிதம்பரத்திற்காக என்றும் துணை நிற்போம். உண்மைக்காக தொடர்ந்து போராடுவோம். சிதம்பரத்தை ஆதரிப்பதற்காக என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள காங்கிரஸ் எப்போதும் தயாராக உள்ளது என . பிரியங்கா தெரிவித்துள்ளார்.