உடனடி முன்ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு ப.சிதம்பரத்துக்கு சிக்கல் நீடிப்பு

by Nagaraj, Aug 21, 2019, 12:14 PM IST

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு, உடனடியாக முன் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது.இதைத் தொடர்ந்து ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் டெல்லியில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்றனர். ஆனால் ப.சிதம்பரம் வீட்டில் இல்லை. இதனால், 2 மணி நேரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ அதிகாரிகள், அவருடைய வீட்டில் நோட்டீஸ் ஒட்டி விட்டுச் சென்றனர்.

ஆனாலும் ப.சிதம்பரம் ஆஜராகாததால் இன்றும் இருமுறை சிபிஐ அதிகாரிகள் அவருடைய வீட்டிற்கு சென்றனர். ப.சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் வெறுங்கையுடன் சிபிஐ அதிகாரிகள் திரும்பினர்.

ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ எடுத்துவரும் இந்த அதிரடி நடவடிக்கைகள் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பற்றிய உண்மைகளை பேசியதால் அவரை வேட்டையாட முயல்வது கேவலமான செயல் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீனை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், அபிசேக் மனு சிங்வி உள்ளிட்ட ஒரு குழுவே வாதாடியது. ஆனால் சிபிஐ தரப்பிலோ, ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் உடனடியாக முன்ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றமும் மறுத்து விட்டது. அத்துடன் ப.சிதம்பரத்தின் மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் முன்னர் வைக்கப்படும் என்றும், அவசரமாக விசாரிப்பது குறித்து அவரே முடிவு செய்வார் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் ப.சிதம்பரத்தை தேடுவதில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே ப.சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பி ஓடாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசை மத்திய அமலாக்கத்துறை பிறப்பித்துள்ளது. இந்த நோட்டீஸை அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கும் அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.


Leave a reply