சிதம்பரத்தை நெருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு என்ன?

INX media case: Lookout notice for P.Chidambaram, CBI prepares to arrest him

by எஸ். எம். கணபதி, Aug 21, 2019, 12:31 PM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு என்ன? மும்பையைச் சேர்ந்த பீட்டர் முகர்ஜி, அவரது 2வது மனைவி இந்திராணி முகர்ஜி சேர்ந்து நடத்திய மீடியா நிறுவனம்தான் ஐ.என்.எக்ஸ் மீடியா. இவர்கள் இருவரும் இந்திராணியின் மகளை கொலை செய்த வழக்கில் கைதாகி, சிறையில் இருப்பது தனி விவகாரம்.

இந்த ஐ.என்.எக்ஸ். நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டில் பங்குகளை விற்பதன் மூலம் வெளிநாட்டில் முதலீிடு திரட்டுவதற்கு முடிவு செய்கிறது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம்(எப்.ஐ.பி.பி) இந்த கம்பெனிக்கு அதன் பங்குகளின் முகமதிப்பைக் கொண்டு ரூ.4.62 கோடி திரட்ட அனுமதியளித்தது.

அப்போது இந்த கம்பெனிக்கு மொரிசியஸ் நாட்டில் உள்ள 3 கம்பெனிகளில் இருந்து ரூ.305 கோடி முதலீடு வருகிறது. வெறும் ரூ.4.62 கோடிக்கு அனுமதி பெற்று விட்டு, ரூ.305 கோடியை உள்ளே கொண்டு வந்தது இந்த கம்பெனி. இது வருமானவரித் துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு, அமலாக்கத் துறைக்கு தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத பணபரிமாற்றங்கள் குறித்து அமலாக்கத் துறைதான் விசாரிக்கும்.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியாவின் இந்திராணி முகர்ஜி, அப்போதைய நிதியமைச்சரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அணுகுகிறார். கார்த்தியின் சிபாரிசு காரணமாக, அந்த ரூ.305 கோடி அன்னிய முதலீடு பெற்ற விவகாரத்தை எப்.ஐ.பி.பி. சரி செய்கிறது. இதற்கிடையே, கார்த்தி நடத்தும் கம்பெனிக்கு ஐ.என்.எக்ஸ் மீடியாவில் இருந்து ‘கமிஷன்’ போகிறது.

அதாவது, கார்த்தி சிதம்பரம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, ஐ.என்.எக்ஸ் மீடியாவின் சட்டவிரோத பணபரிமாற்றத்திற்கு அனுமதி பெற்றுக் கொடுக்கிறார். இப்படி விதிமுறைகளை மீறி எப்.ஐ.பி.பி. அனுமதி கொடுத்ததற்கு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் முக்கியக் காரணம் என்பதுதான் வழக்கு.

கமிஷன் பெற்றுக் கொண்டு முறைகேடாக செயல்பட்டதாக சிதம்பரம் மற்றும் கார்த்தி மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு பதிவு செய்கிறது. வெளிநாட்டில் இருந்து சட்டவிரோத பணபரிமாற்றம் செய்யப்பட்டதற்கு தனியாக ஒரு வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்கிறது.

கடந்த 2017ம் ஆண்டு மே 15ம் தேதி, ப.சிதம்பரம் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படுகிறது. அதற்கு பிறகு சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையினர் முதலில் கார்த்தியை குறி வைக்கின்றனர். அவரும் லுக் அவுட் நோட்டீஸ், முன்ஜாமீன் என்று இழுத்து கொண்டே வந்து கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் கைதாகி, 23 நாட்கள் சிறையில் இருந்தார். பின், மார்ச்சில் வெளியே வந்தார்.

இதன் பின்னர், சிதம்பரத்திற்கு குறி வைக்கப்பட்டது. அவரும் இடைக்கால ஜாமீன், கைது செய்யத் தடை என்று நீதிமன்றங்களின் உத்தரவுகளால் கைதாகாமல் தப்பி வந்தார். கடைசியாக, கடந்த ஜூலை 11ம் தேதி, இந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தான் அப்ரூவராகி உண்மைகளை ஒப்புக்கொள்ள விரும்புவதாக இந்திராணி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதனால், சிதம்பரம், கார்த்தி மீதான இன்னொரு முக்கிய சாட்சியாக இந்திராணி ஆகிறார்.

இந்த நிலையில்தான், ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 20ம் தேதி நிராகரித்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் சிதம்பரத்தின் டெல்லி வீட்டுக்கு படையெடுத்தனர். அங்கு சிதம்பரம் இல்லாததால், அவர் 2 மணி நேரத்திற்குள் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று ஒரு நோட்டீஸை ஒட்டி விட்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையும் சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்திருக்கிறது.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் ஆக.21ல் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் கோரி மனு(எஸ்.எல்.பி) தாக்கல் செய்யப்பட்டது. காலையில் நீதிமன்றம் தொடங்கியதுமே மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித், விவேக் தங்கா ஆகியோர் நீதிபதி என்.வி.ரமணா முன்பாக ஆஜராகி, சிதம்பரத்திற்காக வாதாடினர். நீதிபதி ரமணா, இந்த முன் ஜாமீன் மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு அனுப்புவதாக கூறினார்.
ஆனால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அயோத்தி வழக்கில் விசாரணை நடத்திக் கொண்டிருந்ததால், அங்கு உடனடியாக சிதம்பரத்தின் மனு எடுத்து கொள்ளப்படவில்லை.

இந்த சூழலில், சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் கிடைக்காவிட்டால், அவரை கைது செய்ய வேண்டுமென்பதில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் தீவிரமாக உள்ளனர்.

You'r reading சிதம்பரத்தை நெருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு என்ன? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை