ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் பற்றி நேரில் கண்டறியச் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்களின் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அனைவரும் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, அம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது என அதிரடி முடிவுகளை மத்திய பாஜக அரசு இம்மாத தொடக்கத்தில் எடுத்தது.இந்த முடிவுகளால் அம்மாநிலத்தில் பிரச்னை எழக்கூடாது என்பதற்காக ராணுவத்தை குவித்த மத்திய அரசு, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்தது.அத்துடன் 144 தடை, ஊரடங்கு உத்தரவு என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விதித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மத்திய அரசின் கடும் கெடுபிடிகளால் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதே வெளியுலகுக்கு தெரியவில்லை. அங்குள்ள நிலவரத்தை நேரில் பார்வையிடப் போகிறோம் என்று காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி போன்றோர் காஷ்மீர் சென்றனர். ஆனால் அவர்களை ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி மீண்டும் திருப்பி அனுப்பி விட்டனர்.
இதனை விமர்சித்த ராகுல் காந்தி, காஷ்மீரில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வருகிறது. மத்திய அரசும், ஜம்மு - காஷ்மீர் ஆளுநரும் அதனை மறைக்கின்றனர். இதனால் எதிர்க்கட்சியினர் காஷ்மீர் செல்ல அனுமதி மறுக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், சிறப்பு விமானம் ஏற்பாடு செய்கிறேன், காஷ்மீருக்கு வந்து பாருங்கள் என்று ராகுலுக்கு அழைப்பு விடுத்தார்.இதைத் தொடர்ந்து காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாறி, மாறி அறிக்கை விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று காலை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுச் செயலாளர்களான சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா, திமுக சார்பில் திருச்சி சிவா, ராஷ்டிரிய லோக்தளம், திரிணாமுல்,தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 9 எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் சிறப்பு விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர்.
இந்தக் குழுவினர் காஷ்மீர் செல்லும் தகவல் நேற்றே வெளியானது. இதனால் அம்மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் நேற்றிரவு திடீரென ஒரு உத்தரவு வெளியிடப்பட்டது. அதில், காஷ்மீரில் தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது.இந்நிலையில் அரசியல் தலைவர்கள் அங்கு சென்று மக்களை சந்தித்தால் குழப்பம் ஏற்படும். எனவே ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை காஷ்மீருக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ராணுவ வீரர்களும் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
இதை பொருட்படுத்தாது இன்று ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் தனி விமானத்தில் காஷ்மீர் புறப்பட்டுச் சென்றனர். ஆனால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அனுமதி கிடையாது என்று அதிகாரிகள் பிடிவாதமாக தெரிவித்து அனைவரையும் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அக்கட்சியின் டிவிட்டர் பக்கத்தில், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி விட்டது என்று கூறும் மத்திய அரசு, எதிர்க்கட்சி தலைவர்களை அனுமதிக்க மறுப்பது ஏன்?. இதன் மூலம் உண்மை நிலவரத்தை மறைக்க பாஜக அரசு முயல்கிறது என்றே தெரிகிறது என்று கண்டனம் தெரிவித்துள்ளது.