ரிசர்வ் வங்கி பணத்தை திருடுவதா என்று கடுமையாக விமர்சித்த ராகுல்காந்திக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிலடி கொடுத்துள்ளார். ‘திருடுவதில் ராகுல்தான் நிபுணர்’ என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள உபரி நிதியில் ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசின் கஜானாவுக்கு வழங்க அந்த வங்கி குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது பற்றி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தார். ‘‘ பிரதமரும், நிதியமைச்சரும் சேர்ந்து ஏற்படுத்திய பொருளாதார பேரழிவை எப்படி சீர் செய்வதென தெரியாமல் உள்ளனர். அதற்காக, ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணத்தை திருடுவது பலன் தராது. இது மருந்து கடையில் இருந்து பிளாஸ்திரியை திருடி, துப்பாக்கிக் குண்டு காயத்திற்கு ஒட்டுவது போலாகும்” என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘ராகுல் ஏற்கனவே திருட்டு, திருடன் என்று சொல்லி சேற்றை வாரி இறைத்தார். அதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்தார்கள். இப்போது மீண்டும் அதே வார்த்தைகளையே பேசுகிறார். அவர் இது போன்ற விஷயங்களில் பேசுவதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்த சீனியர் தலைவர்களிடம் விவாதிக்க வேண்டும். திருடுவது என்ற பொருளில் அவர்தான் நிபுணர். அவர் பேசுவதை எல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை’’ என்றார்.