சேலத்தில் பாஜகவினரால் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை,அடுத்த கட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்பு மீறி கலாட்டா, காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா? இதையே அண்ணா அறிவாலயம் அனுமதிக்குமா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ், சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கு இருந்த நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்தார். பொருளாதார வீழ்ச்சி அடைவதற்கு என்ன காரணம்?, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது எதற்காக? என மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் குறித்து கேள்விகளை எழுப்பி வாதம் செய்ததால் பாஜகவினரால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி, கண்டனக் குரல்களும் எழுந்து வருகின்றன.
பியூஷ் மனுஷ் தாக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில்,பாஜக அரசின் அவலங்களை ஆதாரத்துடன் முன்வைத்து விவாதித்த சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ், பாஜக அலுவலகத்தில் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்திருந்தார்.
மு.க.ஸ்டாலினின் இந்த ட்வீட்டர் பதிவிற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் காட்டமாக எதிர்க் கேள்வி கேட்டு டுவிட்டரில் இன்று பதிவிட்டுள்ளதாவது: அடுத்த கட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்பு மீறி கலாட்டா, காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா? இதுதான் சமூக செயல்பாடா? சமூக அமைதி சீர்குலைப்பா? சமூக ஆர்வலர் போர்வையில் வீண் விளம்பரம் தேட வரும் அர்பன் நக்சலைட்களை அடையாளம் காட்டுவோம்! இதையே அண்ணா அறிவாலயம் அனுமதிக்குமா?
அன்று யாரோ எங்கேயோ பேசியதற்காக, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை தேடி வந்து வாசலில் இருந்த பெண் தொண்டர்களையும், என்னையும் மற்றும் காவலர்களையும் காயப்படுத்தி தாக்கியது திமுக என்பது கடந்தகால வரலாறு.
சேலம் ஆடிட்டர் ரமேஷ், வேலூர் வெள்ளையப்பன் போன்ற அப்பாவி பாஜக தலைவர்களையும்,தொண்டர்களையும் வெட்டி சாய்த்தும் கோவையில் குண்டு வைத்து கொலைவெறி தாண்டவமாடிய பாவிகளுக்கும் ஓட்டு வங்கி அரசியலுக்காக பரிந்து பேசும் திமுகதான் மதுரையில் பத்திரிகை அலுவலகத்தில் அப்பாவி பத்திரிக்கையாளர்களை தங்கள் குடும்பத்திற்குள் நடைபெற்ற பதவி கவுரவம் பற்றிய வம்புச்சண்டைக்காக உயிர்ப் பலி வாங்கியதையும் தமிழகம் நினைவில் வைத்திருக்கும் என தமிழிசை காட்டமாக பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.