வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் கோட், சூட், பூட், அணிந்து அசத்தலாக பங்கேற்றார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் பயணமாக நேற்று புறப்பட்ட அவர் முதலில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றடைந்தார்.
சென்னையிலிருந்து தமது வழக்கமான உடையான பளிச்சென்ற வெள்ளை வேஷ்டி, சட்டையில் விமானம் ஏறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கெட்டப், லண்டன் சென்றவுடன் கோட், சூட்,பூட் என்று அந்நாட்டுக்கே உரித்தான பாணிக்கு மாறிவிட்டது.
இன்று லண்டனில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு மேற்கொண்ட 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
கொசுக்களால் பரவும் தொற்று நோய்களை முழுமையாக கட்டுப்படுத்துவது, மருத்துவர் மற்றும் செவிலியர் பணி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் கையெழுத்தாகின.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக உயர் அதிகாரிகளும், லண்டன் நிறுவனத்தின் அதிகாரிகளும் பங்கேற்றனர். இதில் தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் விஜயபாஸ்கரும் கோட், சூட் அணிந்து பந்தாவாக பங்கேற்றனர்.