முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஓபிஎஸ் மோதல் என்று வாட்ஸ் அப்பில் பரவிய சர்ச்சைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தார் ஓ.பன்னீர்செல்வம்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் 28ம் தேதி, இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மூன்று நாடுகளிலும் முதலீட்டாளர்களின் மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி, சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களையும் போட்டு விட்டு, இன்று அதிகாலையில் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் அனைவரும் திரண்டு வந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றனர். விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்புக்கு பின், நிருபர்களுக்கு பேட்டி அளித்து விட்டு முதல்வர் வீடு திரும்பினார்.
இந்நிலையில், சென்னையில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 13 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு திரும்பும் முதல்வரை வரவேற்கச் செல்லாதது ஏன்? என்று ஒரு சர்ச்சை கிளம்பியது.
எடப்பாடிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே இன்னும் பனிப்போர் நீடிக்கிறது, போகும் போது முதல்வர் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்காததால், ஓ.பி.எஸ் கோபமாக இருக்கிறார், எல்லா அமைச்சர்களும் வெளிநாட்டு டூருக்கு போனதில் ஓ.பி.எஸ்.சுக்கு கோபம் என்று பல்வேறு யூகங்கள், கதைகள் வாட்ஸ் அப்பில் உலா வரத் தொடங்கின.
இந்நிலையில், காலை 11 மணியளவில் முதல்வரின் வீட்டிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து பேசினார். இதையடுத்து, வாட்ஸ் அப்பில் இபிஎஸ்-ஓபிஎஸ் மோதல் சர்ச்சைகள் கொஞ்சம் குறைந்து விட்டன. ஒரு வேளை ஓபிஎஸ் இன்று முதல்வரை சந்திக்காமல் இருந்தால், இரவு தொலைக்காட்சி விவாதங்களுக்கு அதுவே தலைப்பாக இருந்திருக்கும். பாவம் தொலைக்காட்சி நெறியாளர்கள்... இந்த விவாதம் பண்ணும் வாய்ப்பு போய் விட்டது!