ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய் தருவோம்: ராஜேந்திர பாலாஜி

ministers rajendra balaji, udhayakumar critisied stalin for his question on c.m.s america tour

by எஸ். எம். கணபதி, Sep 11, 2019, 12:56 PM IST

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, முதல்வர் மீது பொறாமை என்று அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் விமர்சித்துள்ளார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 13 நாள் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு போய் விட்டு திரும்பியுள்ளார். இந்த பயணங்களால் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், ஏற்கனவே அதிமுக ஆட்சியில் 2 முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, ரூ.502 கோடிக்கு 102 ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறார்கள். அந்த முதலீடுகள் வந்ததா? எங்கே இருக்கிறது அந்த தொழிற்சாலைகள்? இதற்கு தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேட்டிருந்தார்.

இந்நிலையில், மதுரையில் இன்று, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. சட்டம்ஒழுங்கு சிறப்பாக உள்ளது. முதலமைச்சர் பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணத்தால், முதலீட்டாளர்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்திருக்கிறார்கள்.

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டவர்கள், முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும். உலகத் தமிழர்களின் நன்மதிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றிருப்பதை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினால் பொறுக்க முடியாமல் பேசுகிறார். இவ்வாறு உதயகுமார் கூறியுள்ளார்.

இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

அமமுக கட்சி நிர்வாகிகள், திமுகவுக்கு போய் சேர்ந்தால், தவறு இல்லை என்று டி.டி.வி.தினகரன் சொல்லியிருக்கிறார். அதிலிருந்தே அவரும் விரைவில் திமுகவில் சேர்ந்து விடுவார் என்று காட்டுகிறது. தினகரன் உண்மையில் எம்.ஜி.ஆர் ரசிகரே இல்லை, அவர் சிவாஜி கணேசனுடைய ரசிகர். அதனால், அப்படித்தான் பேசுவார். ஆனால், ஜெயலலிதா இருக்கும் போது இப்படி பேசுவாரா?

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை, திமுக தலைவர் ஸ்டாலினைத் தவிர மீதி எல்ேலாருமே பாராட்டுகிறார்கள். ஸ்டாலினுக்கு பொறாமை. அவரால் பதவிக்கு வர முடியவில்லை என்று இயலாமையில் பேசுகிறார். முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கிறார். நாங்கள் வெள்ளை, மஞ்சள், பச்சை அறிக்கை... ஏன் வெள்ளரிக்காய் கூட தருவோம்.

தமிழகத்தில் எடப்பாடியார் பசுமைப்புரட்சியை ஏற்படுத்துவார். சேலத்தில் பால்வள ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

You'r reading ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய் தருவோம்: ராஜேந்திர பாலாஜி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை