நாட்டை பொருளாதாரச் சரிவில் இருந்து மீட்பதற்கு 5 அம்சத் தீர்வை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். தற்போது இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5 சதவீதம் என்ற நிலைக்கு இறங்கி விட்டது. மிகப் பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதால், ஆட்டோமொபைல், கட்டுமானத் தொழில் உள்பட பல்வேறு தொழில்களும் கடுமையாக பாதித்துள்ளது. இதனால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பல்வேறு அறிவி்ப்புகளையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், இந்தி சேனல் டைனிக் பாஷ்கர் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாடு மிக மோசமான பொருளாதாரச் சரிவைச் சந்தித்து வருகிறது. இது போன்ற சூழலில், நிபுணர்கள் மற்றும் அனைத்து துறையினரின் ஆலோசனைகளையும் மத்திய அரசு திறந்த மனதுடன் கேட்க வேண்டும். ஆனால், மோடி அரசு எந்தவொரு குறிப்பிட்ட அணுகுமுறையையும் பின்பற்றுவதாக தெரியவில்லை.
முதலில், தலைப்புச் செய்திகளை ஏற்பாடு செய்யும் போக்கில் இருந்து விடுபட்டு வெளியே வர வேண்டும். ஏற்கனவே ஏராளமான நேரம் வீணாகி விட்டது. தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருவதற்கு பதிலாக, மொத்த பொருளாதார அமைப்புகளிலும் ஒரே சமயத்தில் கவனம் செலுத்தி உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு நான் 5 அம்சத் தீர்வுகளை சொல்ல விரும்புகிறேன்.
முதலாவதாக, ஜிஎஸ்டி விதிப்பு நடைமுறைக்கு ஏற்றவாறு திருத்தியமைக்கப்பட வேண்டும். சிறிது காலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றாலும் இதைச் செய்ய வேண்டும். 2வதாக, விவசாயத் தொழிலையும், கிராமப்புற நுகர்வையும் புத்துயிர் ஊட்டி வளர்க்க வேண்டும். இதற்கு காங்கிரசின் தேர்தல் அறிக்கையில், உறுதியான மாற்று வழிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சந்தைகளை எளிமைப்படுத்தி, கிராம மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை கொண்டு வர வேண்டும்.
மூன்றாவதாக, மூலதனங்களை பெருக்குவதற்கு பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். நான்காவதாக, அதிக தொழிலாளர்களை கொண்ட ஜவுளி, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹவுசிங் துறைகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் சலுகைத் திட்டங்களை கொண்டு வர வேண்டும். உதாரணமாக, சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு எளிதான வழிகளில் அதிக கடன் கிடைக்க வசதி ஏற்படுத்த வேண்டும்.
ஐந்தாவதாக, புதிதாக ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ள துறைகளை கண்டறிந்து அதிவேகமாக அதற்கான நடவடிக்கைகளை பெருக்க வேண்டும். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வரிச் சண்டை நடக்கும் இந்த சூழலை சரியாக பயன்படுத்த வேகமாக செயல்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால், மூன்று, நான்கு ஆண்டுகளில் நாம் அதிகமான வளர்ச்சி விகிதத்தை எட்டி விடலாம்.
இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார்.
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஜிடிபி கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது என்றும் மன்மோகன் கவலை தெரிவித்தார்.
மன்மோகன் சிங் ஏற்கனவே நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த போது, தாராளமயமாக்கல் கொள்கை கொண்டு வரப்பட்டது. இன்று இந்தியாவில் இத்தனை வெளிநாட்டு கம்பெனிகள் வந்திருப்பதற்கும், தாராள பொருளாதாரத்திற்கு வழிவகுத்தவரே மன்மோகன்சிங்தான். அவர் நிதியமைச்சர் ஆவதற்கு முன்பு ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர் என்பதும், உலகம் அறிந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.
அவர் சொல்லும் பரிந்துரைகளை மத்திய பாஜக அரசு காதில் கேட்கவாவது செய்யுமா என்பது சந்தேகம்தான். காரணம், சமீபத்தில் தந்தி டி.வி.க்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரிடம், மன்மோகன் ஆட்சிக் காலத்தில் பொருளாதரச் சரிவு ஏற்பட்ட போது, பாஜக கடுமையாக விமர்சித்தது.
இப்போது அது உங்கள் ஆட்சிக்கும் பொருந்தும் அல்லவா? என்று நெறியாளர் கேட்டார். அதற்கு அவர், ஊழல், நாட்டைச் சுரண்டிய ஆட்சி. அவர்களுடன் எங்களை ஒப்பிடுகிறீர்களா? ஐ அப்ஜெக்ட்... என்று கோபமாக பதிலளித்தார். எனவே, மன்மோகன் கருத்துக்களை கேட்பார்களா?