முன்னாள் சபாநாயகர் தற்கொலை.. சிபிஐ விசாரிக்க நாயுடு கோரிக்கை..

TDP Chief Chandrababu Naidu demands CBI inquiry into the alleged suicide of former Speaker

by எஸ். எம். கணபதி, Sep 17, 2019, 12:52 PM IST

ஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாதராவ் தற்கொலையில் சந்தேகம் எழுவதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திராவில் தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது சபாநாயகராக இருந்தவர் கோடெலா சிவபிரசாத ராவ். பலனாடு மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக விளங்கியவர். சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமாக இவர் இருந்ததால், பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவரது மகன் அடாவடியாக செயல்படுகிறார் என்று ஏராளமான புகார்கள் வந்தன.
இந்நிலையில், சிவபிரசாத ராவ் நேற்று(செப்.16) ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கியிருந்தார். இதை அவரது மகள் பார்த்து, உடனடியாக அருகில் உள்ள பசவட்டாரகம் இந்தோ அமெரிக்க கேன்சர் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

இதற்கிடையே, சிவபிரசாத ராவின் மைத்துனர் கஞ்செட்டி சாய் என்பவர், ராவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டிருக்கலாம் என்றும் கூறி, சட்டனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், சிவபிரசாத ராவின் மகன் அவரை மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். தன்னை மகன் துன்புறுத்துவது குறித்து என்னிடம் ஐந்தாறு முறை கூறியிருக்கிறார். சொத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம். அந்த சந்தேகம் எழுவதால் போலீசில் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.

இந்நிலையில், சிவபிரசாத ராவின் சாவில் மர்மம் நிலவுவதால், இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

You'r reading முன்னாள் சபாநாயகர் தற்கொலை.. சிபிஐ விசாரிக்க நாயுடு கோரிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை