அமைச்சர்கள் குடி உயரவே குடிமராமத்து பணிகள்.. டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

Admk men receiving 18% commission in Kudimaramathu scheme

by எஸ். எம். கணபதி, Sep 30, 2019, 14:06 PM IST

குடிமராமத்து திட்டமே அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகளின் குடி உயர்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் என்றும், இத்திட்டத்தில் 18 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள் என்றும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார்.

தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அறிக்கை வருமாறு:

“திமுக ஆட்சியில் வீராணம் ஊழல்” என்று கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சரே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதையும், தற்போது முதலமைச்சராக இருக்கும் இவர் மீதே அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையில் நிலுவையில் இருப்பதையும் ஏனோ மறந்து விட்டார்.

ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டவுடன், தலைதெறிக்க ஓடோடிச் சென்று, உச்சநீதிமன்றத்தில் ஸ்டே வாங்கியது யார்? சாட்சாத் முதலமைச்சர்தானே! தன் முதுகில் எந்த அழுக்கும் இல்லை, பரிசுத்தமானவர் என்றால், உச்சநீதிமன்றத்தில் தான் வாங்கிய ஸ்டேயை விலக்கிக் கொண்டு, ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள முதலமைச்சர் தயாரா? முதலமைச்சர் பொறுப்பில் உள்ள காவல்துறையில் நடைபெற்றுள்ள 350 கோடி ரூபாய் டெண்டர் ஊழலை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்கத் தயாரா?

அ.தி.மு.க ஆட்சியில் குடிமராமத்துப் பணிகள் என்பது, அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் குடி உயரவும், கொள்ளை பரவவும் உருவாக்கப்பட்ட திட்டமே தவிர, ஏரி குளங்களைத் தூர்வார அல்ல. உங்கள் ஆட்சியில் நடக்கும் தூர் வாரும் பணியில் 18 சதவீதம் கமிஷன் அடிக்கிறீர்கள் என்று மக்கள் உங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். முதலமைச்சரால் இல்லை என்று மறுக்க முடியுமா?

தமிழக மாணவர்களை அரசுப் பணியில் சேர விடாமல் தடுக்கும் வகையில் ஒரு புதிய பாடத்திட்டத்தை அறிவித்து விட்டு, தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தன்னாட்சி அமைப்பு என்கிறார் முதலமைச்சர்.

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் அ.தி.மு.க.வினரை உறுப்பினர்களாக நியமித்து, அதை அ.தி.மு.க.வின் அலுவலகமாக மாற்றி அமைத்து, உச்சநீதிமன்றம் வரை போய் மூக்கு உடைபட்டதையும், அதை நாட்டு மக்கள் பார்த்து நகைத்ததையும் ஏனோ முதலமைச்சர் மறந்து விட்டார்.

ஆகவே முதலமைச்சர் பழனிச்சாமி ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. ஆட்சியில்தான் அணைகள் கட்டப்பட்டு காவிரிக் கால்வாய்கள் தூர் வாரப்பட்டன. எதிர்க்கட்சி என்ற நிலையிலும் தி.மு.க. ஏரி குளங்களைத் தூர் வாரியதும், எங்கள் கழகத் தலைவரே முன்னின்று பல மாவட்டங்களில் தூர் வாரச் செய்திருக்கிறார் என்பதும் தமிழக மக்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்கு தெரியும்.

சேலத்தில் ஏரியைத் தூர் வாரப் போன எங்கள் தலைவரை தடுத்தவர் நீங்கள். ஆகவே, எங்கள் தலைவரைப் பற்றிப் பேசுவதற்கு, எந்தத் தகுதியும் உங்களுக்கு இல்லை.
அதுதான் உங்களுக்கும் நல்லது. உங்கள் எதிர்காலத்திற்கும் நல்லது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு டி.ஆர். பாலு கூறியிருக்கிறார்.

You'r reading அமைச்சர்கள் குடி உயரவே குடிமராமத்து பணிகள்.. டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை