ஓடும் பஸ்சில் கண்டக்டரை சரமாரியாக அடித்த 2 போலீஸ்காரர்கள் கைது..

by எஸ். எம். கணபதி, Sep 30, 2019, 16:47 PM IST

நாகர்கோயில் அருகே ஓடும் பஸ்ஸில் கண்டக்டரை சரமாரியாக தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணி ஒருவர் போட்ட வீடியோ வைரலானதால், அந்த காவலர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

குமுளியில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று மாலை ஒரு அரசு பஸ் சென்றது. திருநெல்வேலி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிய விட்ட பின்பு, நாகர்கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. திருநெல்வேலியில் பஸ்ஸில் ஏறிய திருநெல்வேலி ஆயுதப் படைக் காவலர்கள் மகேஷ், தமிழரசன் ஆகியோர் டிக்கெட் எடுக்கவில்லை. காவலர்கள், கைதிகளை அழைத்து கொண்டு டூட்டிக்காக சென்றால், காவல் துறையில் இருந்து அவர்கள் பஸ்சில் இலவச பயணம் செய்வதற்கு ஒரு வாரன்ட் கொடுத்து அனுப்புவார்கள். அதை கண்டக்டரிடம் காட்டினால் டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை.

நாகர்கோவில் பஸ் கண்டக்டர் ரமேஷ், அந்த காவலர்களிடம் வாரன்ட்டை காட்டுமாறு கூறினார். அதற்கு அவர் காட்டுவதாக கூறி விட்டு, வெகு நேரமாகியும் காட்டவில்லை. உடனே கண்டக்டர் ரமேஷ் மீண்டும் அவர்களிடம் வந்து வாரன்ட் இருக்கா, இல்லையா? என்று கோபமாக கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காவலர்கள், ரமேசை திட்டியதுடன் சரமாரியாக அடித்தனர்.

இதில், ரமேஷின் இடது கண்ணுக்கு மேல் பகுதியில் ரத்தக் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த மற்ற பயணிகள், அந்த காவலர்களிடம், போலீஸ்னா இப்படித்தான் அராஜகம் பண்ணுவீங்களா.. சத்தம் போட்டனர். அதன்பிறகு, பஸ் மூன்றடைப்பு காவல் நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டது. கண்டக்டர் ரமேஷ் அங்கு சென்று தன்னை தாக்கிய காவலர்கள் மீது புகார் கொடுத்தார். பின்னர், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இதற்கிடையே, பஸ்ஸில் கண்டக்டரை காவலர்கள் தாக்கும் போது பயணி ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை அவர் வாட்ஸ் அப்பில் பரிமாறினார். இது இப்போது இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதனால், காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. இதைத் தொடர்ந்து, ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய ஆயுதப்படை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். மூன்றடைப்பு போலீஸார் இதன் பிறகு வேக,வேகமாக வழக்கு பதிவு செய்து ஆயுதப்படையைச் சேர்ந்த மகேஷ், தமிழரசன் ஆகியோரை கைது செய்தனர்.

தாக்கப்பட்ட கண்டக்டர் ரமேஷ் கூறுகையில், போலீஸ் வாரன்ட்தான் கேட்டேன். அவர்கள் எங்கு செல்கிறோம் என்று கூட சொல்லவில்லை. வாரன்ட் கேட்டதற்கு இந்த மாதிரி கண்ணுல அடிச்சுட்டாங்கய்யா. ரத்தம் கொட்டுவதைப் பாருங்க... என்றார்.

Get your business listed on our directory >>அதிகம் படித்தவை