இப்படியும் ஒரு மரணம்... விஷ வண்டுகள் தாக்கி பலியான கட்டிட தொழிலாளி...!

One killed in bee attack in vellaradai

by Nishanth, Oct 17, 2020, 19:43 PM IST

குமரி எல்லை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த தொழிலாளியின் முன்னால் விஷ வண்டுகளின் கூடு கீழே விழுந்தது. அதிலிருந்து சாரை சாரையாக வெளியேறிய விஷ வண்டுகள் அந்த தொழிலாளியைச் சுற்றிவளைத்துக் கொட்டின. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குமரி மாவட்ட எல்லை அருகே உள்ள வெள்ளறடை கிராமம். இங்குள்ள ஒற்றைசேகரமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (52). கட்டிடத் தொழில் செய்து வந்தார். இவர் இன்று காலை தனது பைக்கில் வாளிக்கோடு என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அந்த ரோட்டில் ஒரு மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தன. உன்னிகிருஷ்ணன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த மரத்திலிருந்து விஷ வண்டு கூடு ரோட்டில் உன்னிகிருஷ்ணனின் பைக் முன் விழுந்தது.கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விஷ வண்டுகள் கூட்டிலிருந்து சாரை சாரையாக வெளிப்பட்டு உன்னிகிருஷ்ணனைச் சுற்றி வளைத்துக் கொட்டியது. வலியில் அலறித்துடித்த அவர் பைக்கை கீழே போட்டுவிட்டு வண்டுகளிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடினார். ஆனால் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை அந்த விஷ வண்டுகள் அவரை பின்தொடர்ந்து விடாமல் கொட்டின. மேலும் அந்த வழியாகச் சென்றவர்களையும் விஷ வண்டுகள் தாக்கின.

விஷ வண்டுகளின் கொடூர தாக்குதலில் உன்னிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று உன்னிகிருஷ்ணன் மற்றும் வண்டுகள் தாக்கியதில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உன்னிகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை