சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் டிவி நடத்திய நேர்காணலில் பங்கேற்று பேசியுள்ளார். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியவர், தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும் பேசியிருக்கிறார்.
நேர்காணலில் வரவிருக்கும் தமிழக தேர்தலில் ரஜினியுடன் கூட்டணி அமைக்கும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, ``ரஜினிகாந்த் இன்னும் அரசியலில் இறங்கவில்லை. கூட்டணி குறித்து முடிவெடிக்க இன்னும் நிறைய நாட்கள் உள்ளது" என்று பதிலளித்துள்ளார். மேலும், தமிழகத்தில் பாஜகவின் நிலை, அடுத்த கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அமித் ஷா, ``தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த சில மாற்றங்கள் செய்து வருகிறோம். எனினும், அதிமுக தங்களுக்கு நெருக்கமான கட்சி. அவர்களோடு இரண்டு தேர்தலை சந்தித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
தமிழக பாஜகவில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல், புதிதாக கட்சியில் இணைபவர்களுக்கும் பதவிகள் கொடுக்கப்பட்டு அண்மையில் நடிகை குஷ்பு, அண்ணாமலை உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர். அவர்களுக்கு தனி அசைன்மென்ட் கொடுக்கப்பட்டு கட்சியை தமிழகத்தில் காலூன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது பாஜக தலைமை.