அரியானாவில் முதல்வராக கட்டார் மீண்டும் பதவியேற்று கொண்டார். துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா பொறுப்பேற்றார்.
அரியானாவில் கடந்த 21ம் தேதி சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற்றது. அக்.24ம் தேதி முடிவுகள் வெளியாயின. அதில் பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தொங்கு சட்டசபை ஏற்பட்டது. பாஜக 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களையும், லோக்தளம், எச்.எல்.பி ஆகியவை தலா ஒரு தொகுதியையும் கைப்பற்றின. இது தவிர 7 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.
பாஜக ஆட்சி அமைக்க மேலும் 6 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்பட்டது. வெற்றி பெற்றுள்ள சுயேச்சைகளில் 5 பேர் பாஜகவில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிட்டவர்கள். எனவே, அவர்களையும் மற்ற 2 சுயேச்சைகளையும் வளைத்தாலே பாஜக ஆட்சி அமைத்து விடலாம்.
இருந்தாலும், மதில் மேல் பூனை போல் இல்லாமல் உறுதியான ஆட்சி அமைக்க வேண்டும் என்று கருதிய பாஜக மேலிடம், ஜனநாயக ஜனதாவின் ஆதரவை எதிர்பார்த்தது. தேவிலாலின் மகன் ஓம்பிரகாஷ் சவுதலாவின் லோக்தளம்(ஐ.என்.எல்.டி) கட்சி கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 15 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. அந்த கட்சியில் இருந்து குடும்பச் சண்டை காரணமாக சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் தனியாக பிரிந்து சென்று ஆரம்பித்த கட்சிதான் ஜனநாயக ஜனதா.
இந்த கட்சியின் தலைவரான துஷ்யந்த், பாஜக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய அரசு பதவியேற்பு விழா இன்று(அக்.27) பிற்பகல் சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. முதல்வராக மனோகர்லால் கட்டாருக்கு கவர்னர் சத்யதியோ நாராயண் ஆர்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் துஷ்யந்த் சவுதாலாவும் பதவியேற்றார். அவருக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது.
பதவியேற்பு நிகழ்ச்சியில், பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், இமாச்சல் முதல்வர் ஜெய்ராம், உத்தகண்ட் முதல்வர் திரிவேந்திரசிங் ராவத் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.
பாஜகவை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்துதான், ஜே.பி.பி. கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது, அக்கட்சி தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால், சமூக ஊடகங்களில் பதவிக்காக துஷ்யந்த் தவறு செய்து விட்டதாக கடுமையாக சாடியுள்ளனர். அரியானாவில் இடஒதுக்கீடு கோரி மிகப் பெரும் போராட்டங்களை நடத்திய ஜாட் இனத்தவரின் வாக்குகளை பெற்றுத்தான் துஷ்யந்த் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றார். ஆனால், அதற்கு மாறாக பதவிக்காக முடிவெடுத்து விட்டார் என்றும், பாஜகவை தேர்தல் பிரச்சாரத்தில் அவர் திட்டிய வார்த்தைகளை குறிப்பிட்டும் பதிவிட்டுள்ளனர்.
ஆனால், துணை முதல்வரான துஷ்யந்த், எங்கள் இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஆட்சியில் குறைந்தபட்ச பொது திட்டத்தை வகுப்போம் என்றார்.