ரஜினி அரசியலுக்கு வருவாரோ, இல்லையோ இன்னும் கூட தெளிவாகவில்லை. ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் முழுமையான அரசியல்வாதியாகி விட்டார். என்ன தெரியுமா?
ரஜினி அவ்வப்போது தனது வீட்டுவாசலில் மீடியாக்காரர்களை சந்தித்து, எதையாவது சர்ச்சையாக பேசிவிட்டு போவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். நேற்று(நவ.8) அப்படி பேட்டி அளித்த போது அவரிடம், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உங்களை சந்தித்தாரே, அவர் ஏற்கனவே உங்களை பாஜகவுக்கு அழைத்து கொண்டிருக்கிறாரே? கேட்டனர்.
அதற்கு அவர், அவர் என்னை சந்திக்கவில்லை. எனக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை. எனக்கு பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள். திருவள்ளுவருக்கு எப்படி காவி சாயம் பூசப் பார்த்தார்களோ, அதை போல் எனக்கு பூசப் பார்க்கிறார்கள். நானும் மாட்டிக் கொள்ள மாட்டேன். திருவள்ளுவரும் மாட்டிக் கொள்ள மாட்டார் என்று கூறினார்.
ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை. அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ரஜினி மீண்டும் மீடியாக்காரர்களை சந்தித்தார். அப்போது அவர், பாஜகவினர் தற்செயலாக அவர்களது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் திருவள்ளுவருக்கு காவி உடை போட்டிருந்தார்கள். அதை மற்றவர்களும் பண்ண வேண்டுமென்று சொல்லவில்லை. ஆனால், நீங்கதான்..
நீங்கதான்(மீடியா) இதை பெரிதாக ஆக்கிவிட்டீர்கள். நாட்டுல எவ்வளவோ பிரச்னை இருக்கிறது. பொருளாதார மந்த நிலை பிரச்னை எல்லாம் இருக்கிறது. அதை விட்டு விட்டு இதை பெரிதாக்குகிறீர்கள் என்று கூறினார். அத்துடன் தமிழ்நாட்டில் ஆளுமைமிக்க தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்றும் சொன்னார்.
என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள் என்று காலை 11.30 மணிக்கு ஓங்கிச் சொன்ன ரஜினி, பகல் 12.30 மணிக்கு மொத்த பழியையும் மீடியா மீது போட்டு விட்டார். அவருக்கு என்ன நிர்ப்பந்தமோ தெரியவில்லை. ஆனால், பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாருமே எதையாவது ஏடாகூடமாக சொல்லி விட்டால் பின்னர் அதை மீடியா திரித்து போட்டதாக சொல்லி தப்பித்து கொள்வார்கள். அந்த வகையில் மீடியா மீது பழி போடும் தேர்ந்த அரசியல்வாதியாக ரஜினியும் மாறி விட்டார்.