எஸ்.பி.ஜி பாதுகாப்பு வாபஸ்.. சோனியா, ராகுலுக்கு இனி விமான நிலையத்தில் சோதனை..

by எஸ். எம். கணபதி, Nov 9, 2019, 09:01 AM IST
Share Tweet Whatsapp

சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, அவர்கள் விமான நிலையங்களில் வழக்கமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி.(சிறப்பு பாதுகாப்பு படை) பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்ததது. ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பிரதமர்கள் உள்பட வி.வி.ஐ.பி.க்களுக்கு இந்த சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு இந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதற்கு பதிலாக சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, எஸ்.பி.ஜி. படைக்கு ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தார். அதில் அவர், என்னையும், எனது குடும்பத்தினரையும் இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்து வந்த எஸ்.பி.ஜி. படையில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு மிகப் பெரிய நன்றி. உங்களின் அர்ப்பணிப்பு, தொடர்ச்சியான ஆதரவு மற்றும் பாசத்திற்கு நன்றி. உங்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எஸ்.பி.ஜி. பாதுகாப்பு உடையவர்கள், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், கவர்னர்கள், முதல்வர், துணைமுதல்வர்கள், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் போன்றவர்களை விமான நிலையங்களில் பரிசோதனை செய்ய மாட்டார்கள். வேறு போலீஸ் படை பாதுகாப்பு பெற்றிருப்பவர்கள், வழக்கமான பயணிகளின் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அந்த அடிப்படையில், இனிமேல் விமான நிலையங்களில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை வழக்கமான பயணிகளை போல் சோதனையிட்ட பிறகே விமானத்தில் செல்வதற்கு அனுமதிப்பார்கள்.


Leave a reply