அயோத்தி நில வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வில் உள்ள 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது.
கடந்த 2010ம் ஆண்டில் அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்பில் நிலத்தை பங்கிட்டு கொள்ள உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து இருதரப்பினருமே மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அவற்றை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்தது. 40 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக அவர் விசாரித்த வழக்குகளில் தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, அயோத்தி நில வழக்கில் இன்று(நவ.9) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் சரியாக 10.30 மணிக்கு வாசிக்கத் தொடங்கினர். அப்போது, இந்த வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்துடன் ஒரே தீர்ப்பை வழங்குவதாக தெரிவித்தார். மேலும், அரசியல், மதம், நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநிறுத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார். சன்னி வக்பு வாரியம், ஷியா வக்பு வாரியம் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நிர்மோகி அகாரா சிவில் வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.