அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்வதற்கும் உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது.
கடந்த 2010ம் ஆண்டில் அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்பில் நிலத்தை பங்கிட்டு கொள்ள உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து இருதரப்பினருமே மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அவற்றை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்தது. 40 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக அவர் விசாரித்த வழக்குகளில் தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, அயோத்தி நில வழக்கில் இன்று(நவ.9) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் சரியாக 10.30 மணிக்கு வாசிக்கத் தொடங்கினர். அப்போது, இந்த வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்துடன் ஒரே தீர்ப்பை வழங்குவதாக தெரிவித்தார். மேலும், அரசியல், மதம், நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநிறுத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார். சன்னி வக்பு வாரியம், ஷியா வக்பு வாரியம் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நிர்மோகி அகாரா சிவில் வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மேலும் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
அரசு வருவாய்த் துறை ஆவணங்களின்படி பார்த்தால், அந்த நிலம் அரசுக்கு சொந்தமான நிலம்.
தொல்லியல் துறையின் அறிக்கை சந்தேகத்திற்கு இடமளிக்காததால், அதை நிராகரிக்க முடியாது.
அயோத்தியில் ராமரின் பிறந்த இடம் என்ற இந்துக்களின் நம்பிக்கையை யாரும் மறுக்கவில்லை. அதே போல், முஸ்லிம்கள் அங்கு தொழுகை நடத்தி வந்ததையும் யாரும் மறுக்கவில்லை.
உள்புறத்தில் முஸ்லிம்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளார்கள். வெளிப்புறத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
பல பிரச்னைகள் இருந்தாலும் முஸ்லிம்கள் தொடர்ந்து தொழுகை நடத்தி வந்திருக்கிறார்கள். எனவே, மசூதியை அவர்கள் கைவிட்டு விடவில்லை.
1857க்கு முன்பு உள்ள ஆவணங்களை பார்த்தால், உள்புறத்தில் இந்துக்கள் வழிபடுவதை யாரும் தடுக்கவில்லை. 1857ல் தான் அது உள்புறம், வெளிப்புறம் என பிரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 325 ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை.
அதே சமயம், 1949ல் சிலைகளை வைத்து அந்த இடத்தை பிரித்ததும், 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முரணானது.
சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து தரச் சொன்ன அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு தவறானது. 1857க்கு முன்பு முஸ்லிம்கள் அந்த இடத்தை உரிமை கொண்டாடியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் சிலைகள் வைத்து கொள்வதற்கு ஒப்படைக்க உத்தரவிடப்படுகிறது. இதற்கு மாற்றாக வேறு இடத்தை மசூதி கட்டுவதற்கு முஸ்லிம்களுக்கு ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.
சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு 3 மாதங்களில் அறங்காவலர் குழுவை அமைத்து கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு 3 மாதங்களில் அந்த இடத்தை அறங்காவலர் குழுவிடம் ஒப்படைத்து விட்டு, அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்திடம் அரசு அளிக்க வேண்டும்.
ஏற்கனவே மத்தியஸ்தர் குழுவாக செயல்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா, வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆகியோர் இந்த பிரச்னையில் இறுதி கட்டத்தை கொண்டு வந்ததற்காக பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.