திமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம்

Dmk fixed age limit for Youth wing at General council meet

by எஸ். எம். கணபதி, Oct 7, 2020, 22:02 PM IST

திமுக இளைஞரணியில் சேருவதற்கு 18 முதல் 35 வயது வரை வரம்பு நிர்ணயம் செய்து கட்சியின் விதிகளில் திருத்தம் செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போல், திருநங்கைகள், வெளிநாடு வாழ் இந்தியர்களை சேர்ப்பதற்கும் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்த ஆண்டுக்கான தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், கடந்த செப்டம்பர் 6ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அந்நேரத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் நடந்ததால் தள்ளி வைக்கப்பட்டது. இதன்பின், நவ.10ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி, தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், தலைமை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி எம்.பி. உள்பட முக்கிய நிர்வாகிகளும், பொதுக் குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

முதலில் அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி, பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ, ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும். தி.மு.க. உட்கட்சித் தேர்தலை 2020ம் ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கட்சியில் புதிய உறுப்பினர்களை இணையதளம் மூலம் சேர்த்தல், திருநங்கைகள், வெளிநாடுவாழ் இந்தியர்களை தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்த்தல், தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்களுக்கு 18 முதல் 35 வயது வரை வயது வரம்பு நிர்ணயித்தல் ஆகியவற்றுக்காக கட்சி விதிகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அளிக்கப்படும் இடஒதுக்கீட்டை நீர்த்து போகச் செய்யும் வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர வகுப்பினர் என்ற ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்ததை கண்டித்தும், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்ற வலியுறுத்தியும் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை கட்சித் தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.

You'r reading திமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை