மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இருந்து சிவசேனா அமைச்சர் அரவிந்த் சாவந்த் இன்று ராஜினாமா செய்தார். பாஜக பொய் சொல்லுவதால், பதவி விலகியதாக கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின் போது, 50:50 என்ற விகிதத்தில் சிவசேனா சீட் கேட்டது. ஆனால், அதற்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை.
அதன்பின்பு, பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேரடியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் பேசினார். அப்போது, இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி என்பதற்கு ஒப்புக் கொண்டால், குறைந்த இடங்களில் போட்டியிடுவதாக சிவசேனா நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. அதனால், பாஜக 150 இடங்களிலும், அதன் சின்னத்தில் 14 குட்டி கட்சிகளும் போட்டியிட்டன. சிவசேனா 122 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது.
இந்நிலையில், சிவசேனா தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தனது கட்சிக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்று பிடிவாதமாக கேட்டது. பாஜகவோ தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து விட்டது.
இந்த இழுபறியில் பாஜக தலைவர் பட்நாவிசுக்கு பதவியேற்க வருமாறு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். அவர் கவர்னரை சந்தித்து பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாததால், ஆட்சியமைக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டார்.
இதன்பின், 2வது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். சிவசேனாவுக்கு தேசியவாதகாங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளிக்கலாம் என தெரிகிறது. அதற்கு அக்கட்சிகள் விதித்த நிபந்தனை, மத்திய அரசில் இருந்து சிவசேனா விலகி, பாஜக கூட்டணியை முறிக்க வேண்டுமென்பதுதான்.
இந்நிலையில், சிவசேனாவைச் சேர்ந்த ஒரே மத்திய அமைச்சரான அரவிந்த் சாவந்த், இன்று ராஜினாமா செய்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை அறிவித்தார். அதில் அவர், சிவசேனா எப்போதும் வாய்மையின் பக்கம் நிற்கும். ஆனால், பாஜக இப்போது பொய் சொல்கிறது. பாஜகவின் பொய்யான சூழ்நிலையில் மத்திய அரசில் எப்படி இருக்க முடியும். அதனால், நான் பதவி விலகுகிறேன். இது தொடர்பாக, காலை 11 மணிக்கு மீடியாவிடம் விளக்கம் அளிப்பேன்.
பாஜகவும், சிவசேனாவும் தேர்தல் உடன்பாடு செய்து கொண்ட போது, முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு விட்டுத் தருவதாக பாஜக கூறியது. இப்போது, நாங்கள் பொய் சொல்லுவதாக கூறுகிறது. இது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை அவமதிப்பதாகும் என்று கூறியுள்ளார்.