மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கவுள்ளது. இது குறித்து, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடம் மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின் போது, சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தங்கள் கட்சிக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்று சிவசேனா பிடிவாதமாக கேட்டது. பாஜகவோ தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து விட்டது.
இந்த இழுபறியில், பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் பட்நாவிஸை பதவியேற்க வருமாறு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். அவர் கவர்னரை சந்தித்து பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாததால், ஆட்சியமைக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டார்.
இதன்பின், 2வது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். சிவசேனாவுக்கு தேசியவாதகாங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளிக்கலாம் என தெரிகிறது. அதற்கு அக்கட்சிகள் விதித்த நிபந்தனை, மத்திய அரசில் இருந்து சிவசேனா விலகி, பாஜக கூட்டணியை முறிக்க வேண்டுமென்பதுதான்.
இதையடுத்து, சிவசேனாவின் ஒரே மத்திய அமைச்சரான கனரகத் தொழில்துறை அமைச்சர் அரவிந்த் சாவந்த் பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விவாதித்து வருகிறார்.
பாஜக வழக்கம் போல், தங்கள் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிப்பார்கள் என்று பயந்த காங்கிரஸ் மேலிடம் முன்கூட்டியே, மகாராஷ்டிராவில் வெற்றி பெற்ற 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் ராஜஸ்தானுக்கு அழைத்து சென்றது. காங்கிரஸ் ஆளும் அந்த மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் பியூனோ விஸ்டா ரிசார்ட்ஸில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் பாலாசாகேப் ேதாரட், அசோக் சவான், பிருத்விராஜ் சவான் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நேற்று காலை 9 மணிக்கு வந்தனர். அவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் சிவசேனாவை ஆதரிப்பது குறித்து விவாதித்தனர். அப்போது பல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சிவசேனா ஆட்சியை வெளியில் இருந்து ஆதரிப்பதற்கு பதிலாக ஆட்சியில் பங்கேற்க வேண்டுமென்று கூறியுள்ளனர். எனினும், இது குறித்து காங்கிரஸ் மேலிடம்தான் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.