நடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி

by எஸ். எம். கணபதி, Nov 12, 2019, 13:25 PM IST

நடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி கணேசன் நிலைமைதான் வரும் என்று ரஜினிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

சேலத்தில் முகாமிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பின், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நடிகர்களுக்கு வயதாகி விட்டால், அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். திரைப்படத்தில் கிடைத்த விளம்பரத்தை வைத்து தலைவராகப் பார்க்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை பொறுப்புகள் இருக்கிறது என்பதுகூட நடிகர்களுக்கு தெரிந்திருக்காது. எல்லா நடிகர்களும் மக்களிடம் செல்வாக்கு இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள்.

நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன அரசியல் தெரியும்? இடைத்தேர்தலில் அவரது கட்சி ஏன் போட்டியிடவில்லை? இனிமேல் நடிகர்கள் யார் கட்சி தொடங்கினாலும், சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவர்களுக்கு வரும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


More Politics News