தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பாதுகாப்பு போலீசாருடன் அவர் ஜோலார்பேட்டைக்கு வந்து சேர்ந்தார்.
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தங்கவேல் தெருவை சேர்ந்த குயில்தாசன், அற்புதம்மாள் ஆகியோரின் மகன் பேரறிவாளன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆயுள் தண்டனை காலத்தை முடித்து விட்டதால், அவரை எப்படியாவது விடுதலை பெறச் செய்ய வேண்டுமென்று அவரது தாயார் அற்புதம்மாள் முயற்சித்து வருகிறார்.
இதற்கிடையே, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு மூட்டு வலி ஏற்பட்டதால், சிகிச்சை வசதிக்காக புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பேரறிவாளனுக்கு பரோல் கோரி சிறைத்துறைக்கு விண்ணப்பித்தனர்.
இதை சிறைத் துறை ஏற்று அவருக்கு ஒரு மாதம் பரோல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று காலையில் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவருடன் பாதுகாப்பு போலீசாரும் வந்துள்ளனர்.