திமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை

Admk fears localbody Election says M.K.Stalin

by எஸ். எம். கணபதி, Nov 21, 2019, 09:20 AM IST

மேயர், நகராட்சித தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் வைத்தால், திமுக அமோக வெற்றி பெற்று விடும் என்று அமைச்சர் வேலுமணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என்று அவசரச்சட்டம் பிறப்பித்திருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. ஆட்சியில் குறிப்பாக, இந்த நான்காண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் அனைத்தும் ஊழல் உற்பத்தி மன்றங்களாக நிறம், குணம் மாற்றப்பட்டு, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கும் அவரது உறவினருக்கும் கான்ட்ராக்ட் வழங்கும் நிழல் மன்றங்களாக உள்ளாட்சி அமைப்புகள் தரம் தாழ்த்தப்பட்டு விட்டன.

வரலாறு காணாத ஊழல் சகதியில் சிக்கியிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு நேரடித் தேர்தல் வைத்தால், திமுக அமோக வெற்றி பெற்றுவிடும் என்றும், உள்ளாட்சித்துறை ஊழல்கள் ஒவ்வொன்றாக வெட்டவெளிச்சத்திற்கு வந்து ஊரே நாறிவிடும் என்றும் அமைச்சர் வேலுமணியும், அவரைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். ஆகவே, தங்கள் ஊழல்களை மறைத்துக் கொள்ள, ஜனநாயகத்தை - குறிப்பாக உள்ளாட்சி ஜனநாயகத்தை, திட்டமிட்டு பட்டப்பகலில் படுகொலை செய்திருக்கிறார்கள்.

பணம் கொடுத்து, பரவலாக அதிகார துஷ்பிரயோகம் செய்து இரு இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றியால் அ.தி.மு.க.விற்கு மக்கள் செல்வாக்கு பெருகிவிட்டது என்று கற்பனையான ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர், இப்போது களத்தில் நிலவும் உண்மையைப் புரிந்து கொண்டு விட்டார்.

நேரடித் தேர்தல் என்றால், அ.தி.மு.க. எந்த ஒரு மேயர் பதவியிலோ, நகராட்சித் தலைவர் பதவியிலோ, பேரூராட்சித் தலைவர் பதவியிலோ வெற்றி பெற முடியாது என்பதையும், மக்கள் அ.தி.மு.க.வை அடியோடு நிராகரிப்பார்கள்; வேரொடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தி விடுவார்கள் என்பதையும் புரிந்துகொண்டு விட்டார்.

தேர்தலுக்கு முன்பே முதலமைச்சர் படுதோல்வியை ஒப்புக் கொண்டு விட்டதைத்தான், இந்த மறைமுகத் தேர்தலுக்கான அவசரச்சட்டம் எதிரொலிக்கிறது. 2018-ல் நேரடித் தேர்தல் என்று சட்டம் கொண்டு வந்த போது, “சொந்த வார்டில் மேயர் எப்போதுமே கவனம் செலுத்துவார். மெஜாரிட்டியை அனுசரித்துப் போக வேண்டும் என்பதால் தனித்து இயங்கி சேவை செய்ய முடியாது, ஒருங்கிணைந்த வளர்ச்சிக்குத் தேவையான முடிவை சுலபமாக எடுக்க முடியாது” என்று, இதே அ.தி.மு.க. அரசு சொன்னது.

ஆனால் இப்போது, “மெஜாரிட்டி கவுன்சிலர்களின் ஆதரவு இருந்தால்தான் மன்றத்தில் முடிவுகளை எடுக்க முடியும், நிலையான மற்றும் கூட்டுப் பொறுப்பு வாய்ந்த உள்ளாட்சி அமைப்புகளாகவும் இருக்கும், உள்ளாட்சி அமைப்புகளில் ஒற்றுமையாகச் செயல்பட முடியும்” என்றெல்லாம், அப்படியே “அந்தர் பல்டி” அடித்து, இட்டுக் கட்டிய சில காரணங்களை மறைமுகத் தேர்தலுக்கான அவசரச்சட்டத்தின் நோக்கங்களாகக் கூறியிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு, “மேயர்கள் நேரடியாகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கும், இன்று “மறைமுகத் தேர்தல்” என வெளிவந்துள்ள அவசரச்சட்டத்திற்கும் என்னே வேறுபாடு.

“மேயர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கவில்லை” என்று இன்று மதியம் பேட்டியளித்த துணை முதலமைச்சருக்கும், அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கும் துறை அமைச்சரான வேலுமணி மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கும் மிகப்பெரிய வேறுபாடு.

எனவே, “கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்” என்று திணறிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசின் அமைச்சரவை, உள்ளாட்சித் தேர்தலை எப்படிச் சந்திப்பது என்பதில் ஒட்டுமொத்தமாகக் குழப்பமடைந்து, இறுதியில் ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது.

திமுகவை பொறுத்தவரை, மக்களின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறது. உள்ளாட்சிகளுக்கு “மறைமுகத் தேர்தலோ” அல்லது “நேரடித் தேர்தலோ” - எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலையும் ஜனநாயக ரீதியில் தீரத்துடன் சந்திப்போம்! மக்களின் பேராதரவுடன் வெற்றி வாகை சூடி – அ.தி.மு.க. அரசின் ஊழல் துர்நாற்றத்திலிருந்து உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தையும் கைப்பற்றி - காப்பாற்றி, தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் கிடைக்காத அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading திமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை