ஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை.

Supreme Court hear today, OPS and 10 MLA disqualification case.

by எஸ். எம். கணபதி, Feb 4, 2020, 11:25 AM IST

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதா மரணத்திற்குப் பின், முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகினார். அப்போது தன்னை சசிகலா குடும்பம் கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்ததாக குற்றம்சாட்டி தர்மயுத்தம் நடத்தினார். ஆனாலும், சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி விட்டார். அவர் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய போது, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.


அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களில் எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் கைகோர்த்து, சசிகலா குடும்பத்தை ஒதுக்கித் தள்ளினர். ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சரானார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விஷயத்தில் சபாநாயகர் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், ஐகோர்ட் தலையிட முடியாது என்று கூறி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு அம்மனுவை தள்ளுபடி செய்தது.


இதை எதிர்த்து சக்கரபாணி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது தலைமை நீதிபதி போப்டே, சபாநாயகர் ஒரு முடிவெடுத்திருந்தால், அதை நீதிமன்றம் ஆய்வு செய்யலாம். ஆனால், அவர் முடிவே எடுக்காத நிலையில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கை தள்ளி வைத்தார்.


இந்நிலையில், மணிப்பூர் சபாநாயகரை எதிர்த்து இதே போன்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வேறு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அம்மாநிலத்தின் அமைச்சர் ஷியாம்குமார் என்பவரை தகுதிநீக்கம் செய்யக் கோரும் மனுவை சபாநாயகர் ஆய்வு செய்யாமலேயே கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதை எதிர்த்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபாநாயகர் இப்படி முடிவெடுக்காமல் இருப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளது. எனவே, 4 வாரங்களுக்குள் அவர் முடிவெடுக்க வேண்டும். மேலும், கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எழும் புகார்களை விசாரிக்க தன்னிச்சையான அமைப்பை ஏற்படுத்துவது குறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது.


இதையடுத்து, திமுக கொறடா சக்கரபாணி தரப்பு சீனியர் வக்கீல் கபில்சிபல், தலைமை நீதிபதி போப்டே முன்பாக ஆஜராகி, சுப்ரீம் கோர்ட்டின் புதிய தீர்ப்பை சுட்டிக்காட்டினார். எனவே, ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரும் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று வாதாடினார்.
இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி போப்டே, பிப்.4ம் தேதி விசாரிப்பதாக கூறியிருந்தார். அதன்படி, இன்று தலைமை நீதிபதி போப்டே அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.


You'r reading ஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை