டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன்சிங், ராகுல், பிரியங்கா ஆகியோர் இன்று பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வந்தது. இதன் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, வரும் 8ம் தேதி அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் என்று மும்முனைப் போட்டி காணப்படுகிறது.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், கடந்த ஒரு மாதமாக தினம்தோறும் பிரச்சாரம் செய்து வருகிறார். பாஜகவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் அவ்வப்போது பிரச்சாரம் செய்து வந்தனர். காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலை பற்றி அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை. அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இது வரை பிரச்சாரம் செய்யவில்லை.
இந்நிலையில், இன்று காங்கிரஸ் சார்பில் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரச்சாரம் செய்கிறார்கள். மன்மோகன், ரஜவுரி கார்டன் பகுதியிலும், ராகுல்காந்தி, ஜங்க்புரா பகுதியிலும், பிரியங்கா காந்தி, சங்கர்விஹார் பகுதியிலும் பிரச்சாரம் செய்கின்றனர். பிரதமர் மோடி இன்று துவாரகா பகுதியிலும், அமித்ஷா, படேல் நகர், திமர்பூர் பகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி, பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒரு வேளை யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனால், ஆம் ஆத்மியும், காங்கிரசும் கைகோர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.